ஜனாதிபதி தேர்தலையொட்டி பாஜக மேலாண்மை குழு அமைப்பு
1 min read
BJP management committee structure for the presidential election
17.6.2022
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக 14 பேர் கொண்ட மேலாண்மை குழுவை பாஜக அமைத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
இந்தியாவின் 15 வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் அடுத்தமாதம் (ஜூலை) 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனால்,அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து,ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக, எதிர்க்கட்சிகளுடன் டெல்லியில் நேற்று முன்தினம் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது,எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத்பவாரை அனைவரும் முன்மொழிந்த நிலையில்,உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தன்னால் நிற்க முடியாது என்று சரத்பவார் மறுத்விட்டார். இதனால் மறுபரிசீலனை செய்யுமாறு எதிர்க்கட்சிகள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலாண்மை குழு
இதனிடையே,ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் பணியில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக 14 பேர் கொண்ட மேலாண்மை குழுவை பாஜக அமைத்துள்ளது. மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தலைமையிலான குழுவில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்னவ்,கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக,இக்குழுவில் தமிழகத்தை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இடம்பெற்றுள்ளார்.