மணலியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சம் இழந்த காண்டிராக்டர் தற்கொலை
1 min read
Contractor commits suicide after losing Rs 20 lakh in online gambling in Manali
18.6.2022
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சம் இழந்த காண்டிராக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆன்லைன் சூதாட்டம்
சென்னையை அடுத்த மணலி அறிஞர் அண்ணா முதல் தெருவில் வசித்து வந்தவர் நாகராஜன் (வயது 37). இவரது மனைவி வரலட்சுமி. இவர்களுக்கு பிரணாவ் (8) பிரதீப் (6) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை. இவர் பெயிண்டிங் காண்டிராக்ட் எடுத்து ஆட்களை வைத்து வேலை செய்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக இவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி லட்ச கணக்கில் பணத்தை இழந்துள்ளார். இதனால் அக்கம்பக்கத்தினர், உறவினர், நண்பர்கள் என பலரிடம் கடன் வாங்கி உள்ளார். மேலும் மனைவியின் நகைகளை அடமானம் வைத்தும் சூதாடி உள்ளார். இதனால் இவருக்கு ரூ.20 லட்சம் வரை கடன் ஏற்பட்டு உள்ளது. ஒரு காலக்கட்டத்தில் கடன் சுமையால் ஆன்லைன் சூதாட்டத்துக்கு பயன்படுத்திய போனையே அடமானம் வைத்துள்ளார். மேலும், கடன் சுமைக்கு சூதாட்டம் தான் காரணம் என மன உளைச்சலில் இருந்துள்ளார்.
தற்கொலை
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். சத்தம் கேட்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நாகராஜன் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், ‘எனக்கு ரூ.20 லட்சம் கடன் உள்ளது, என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என எழுதி இருந்தது. ஆன்லைன் சூதாட்டத்தில் காண்டிராக்டர் இறந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.