July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

அமர்சேவா சங்கம் மனிதநேயத்தை மக்களுக்கு எடுத்துரைக்கிறது- கவர்னர் ஆர்.என். ரவி பேச்சு

1 min read

Amar Seva Sangam preaches humanity to the people – Governor RN Ravi speech

19.6.2022
அமர்சேவா சங்கம் மனிதநேயத்தை மக்களுக்கு எடுத்துரைக்கிறது என்று கவர்னர் ஆர்.என். ரவி பேசினார்.

கவர்னர் ஆர்.என்.ரவி

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்றுமுன்தினம் தூத்துக்குடி நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு நெல்லை வழியாக தென்காசி சென்றார். தென்காசி மாவட்டம் கடையம் அருகே கோவிந்தபேரியில், பத்மஸ்ரீ விருது பெற்ற ஷோகோ கார்ப்பரேசன் நிறுவனர் ஸ்ரீதர்வேம்புவை சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் அவரது சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபின் குற்றாலம் அரசு விடுதியில் தங்கினார்.

இன்று காலை தென்காசி ஆய்க்குடியில் உள்ள அமர்சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு விழா மற்றும் புதிய கட்டிட திறப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அமர்சேவா சங்கத்தின் செயலாளர் சங்கரராமன் அனைவரையும் வரவேற்றார். சங்கத்தின் நிறுவன தலைவர் ராமகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் சிறப்புரை ஆற்றினார்.

விருது

தொடர்ந்து அமர்சேவா சங்கத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்தவர்களுக்கு தலைமை விருந்தினரான கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டி கவுரவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

தென்காசி மாவட்டத்திற்கு மாநில அளவில் மட்டும் அல்லாது இந்திய அளவில் மிகச்சிறந்த எதிர்காலம் உள்ளது. இங்கு அமைந்துள்ள அமர்சேவா சங்கம் மனித நேயத்தை மக்களுக்கு எடுத்துரைக்கிறது.
சமூகத்தில் நீண்ட காலமாகவே, எனக்கு நடக்க முடிகிறது. என்னால் எனது வேலையை செய்யமுடிகிறது. எனக்கு இது போதும் என்ற நினைப்புகளை கொண்ட மக்கள் தான் உள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. மாற்றுத்திறனாளி மனிதர்களை மதிக்க வேண்டும். அவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கும் நம்மை போன்று பொதுவான உரிமைகள், எதிர்பார்ப்புகள் இந்த சமூகத்தில் உள்ளன.

40 ஆண்டுகால சேவை

தற்போது அமர்சேவா சங்கத்தின் தலைவரான ராமகிருஷ்ணன் வாழ்நாளை மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்காக அர்ப்பணித்தவர். அவரது 40 ஆண்டுகால சேவை மிகவும் பாராட்டத்தக்கது. அவரை வாழ்வில் முன்மாதிரியாக கொண்டு இன்னும் நிறையே பேர் வர வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவம் மற்றும் மறுவாழ்விற்கு இவர் மேற்கொண்ட பங்களிப்பின் காரணமாகவே இவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. இவரை கண்டு நான் பிரம்மிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். அதன்பின்னர் சோலார் திட்டத்தை அர்ப்பணித்த கவர்னர் ஆர்.என்.ரவி, மாற்றுத்திறனாளிகளுக்கான பல்நோக்கு பயிற்சி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார். முடிவில் சங்கத்தின் இணை செயலாளர் விஸ்வநாதன் கணேசன் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.