July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

கேரள தங்க கடத்தல் வழக்கு பற்றி சி.பி.ஐ. விசாரணை தேவை- பிரதமருக்கு ஸ்வப்னா சுரேஷ் கடிதம்

1 min read

CBI probes Kerala gold smuggling case Swapna Suresh’s letter to PM

21.6.2022
கேரள தங்க கடத்தல் வழக்கில் மாநில அரசின் முக்கிய நிர்வாகிகளின் பங்கு பற்றி சி.பி.ஐ. விசாரணை தேவை என பிரதமர் மோடிக்கு ஸ்வப்னா சுரேஷ் கடிதம் எழுதியுள்ளார்.

தங்கம் கடத்தல் வழக்கு

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்துக்கு 2020ம் ஆண்டில் பார்சல் மூலம் கடத்தி வரப்பட்ட 30 கிலோ எடை கொண்ட, அன்றைக்கு ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக 5-7-2020 அன்று சுங்கத்துறையினர், அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி பெங்களூருவில் 11-7-2020 அன்று ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் ஊழியரான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் முதல்-மந்திரி பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரன், தூதரகத்தின் இன்னொரு ஊழியர் சரித் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம்

சிறையில் அடைக்கப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் 16 மாதங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் ஸ்வப்னா சுரேஷ் சில தினங்களுக்கு முன் கோர்ட்டில் ரகசிய வாக்கு மூலம் அளித்தார். அதில் தங்க கடத்தல் வழக்கில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர், முன்னாள் மந்திரி ஜலீல் ஆகியோருக்கும் தொடர்பு உள்ளதென்று கூறினார்.

கடிதம்

ஸ்வப்னா சுரேஷ் கேரள முதல்-மந்திரியின் கட்டுப்பாட்டில் இருந்த தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்தவர் ஆவார். இந்நிலையில், வழக்கின் முதன்மை குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்த கடத்தலில் உண்மையில் ஈடுபட்ட நபர் ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவசங்கர் (கேரள முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர்) என உங்களது கவனத்திற்கு கொண்டுவர நான் விரும்புகிறேன். இதுபோன்ற உயர் பதவியிலுள்ள அதிகாரிகளால், என்னை போன்ற ஊழியர்கள் சிலர் இந்த நாசகர ஊழலுக்கு துணை நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மதிப்புமிகு வேலை

நான், என்னுடைய பணி மேலாளர்களின் உத்தரவுகளை பணிந்து ஏற்க மட்டுமே செய்தேன். ஏற்று, ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகம் வழியே அதனை செய்தேன். இந்த விவகாரத்தில் கூற என்னிடம் ஒன்றும் இல்லை. சுங்க அதிகாரிகளால் இந்த கடத்தல் வெளிச்சத்திற்கு வந்த பின்னர், 15 மாதங்களாக எங்களை சிறையில் அடைத்து, தவிக்க விட்டு விட்டனர். எந்த விவரங்களையும் அதிகாரிகள் வெளியிடாமல் உள்ளனர்.

சிவசங்கர் கூட 3 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். ஆனால், அவருக்கு முன்ஜாமீன் வழங்கிய கேரள அரசு, மதிப்புமிகு வேலை ஒன்றையும் வழங்கி, கண்ணிய வாழ்வொன்றை நடத்தவும் அனுமதித்து உள்ளது என ஸ்வப்னா குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.

சி.பி.ஐ. விசாரணை

அதனால், கேரள தங்க கடத்தல் வழக்கில் மாநில அரசு பதவியில் உள்ள முக்கிய நிர்வாகிகளின் பங்கு பற்றி சி.பி.ஐ. விசாரணை தேவை.
இவ்வாறு பிரதமர் மோடிக்கு ஸ்வப்னா சுரேஷ் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.