ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா
1 min read
Yashwant Sinha is the common candidate of the opposition in the presidential election
21.6.2022
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டு உள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தும் நடவடிக்கையில் திரினாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டு வந்தார். இதற்காக அண்மையில் டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தை அவர் கூட்டியிருந்தார்.
இந்த கூட்டத்தில் திமுக உள்பட 21 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. எனினும் அவர்கள் போட்டியிட மறுப்பு தெரிவித்தனர். இதேபோல் ஃபரூக் அப்துல்லாவும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தார்.
யஷ்வந்த் சின்ஹா
இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் இன்று சரத்பவார் தலைமையில எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி கூட்டணியின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவின் பெயர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
முன்னாள் மத்திய மந்திரியும், பாஜக தலைவர்களில் ஒருவராக இருந்த யஷ்வந்த்சின்கா, அந்த கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் துணைத் தலைவராக அவர் இருந்து வந்தார். குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து அவர் விலகி உள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தமக்கு கௌரவம் அளித்ததற்காக மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவிப்பதாக தமது டுவிட்டர் பதிவில் சின்ஹா குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக நான் கட்சியில் இருந்து ஒதுங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.