பழைய குற்றாலத்தில் இரவிலும் குளிக்க அனுமதிக்க கோரிக்கை
1 min read
Request to allow night bathing in old courtralam
6.7.2022
பழைய குற்றாலத்தில் இரவிலும் குளிக்க அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
குற்றாலம்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த ஆண்டு ஜூன் மாதம் சீசன் தொடங்கவில்லை. பழைய குற்றாலம் கடந்த சில நாட்களாக சாரல் மழை தொடர்ந்து பெய்கிறது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி பழைய குற்றாலம், புலிஅருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் சீராக விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர். ஆனால் பழைய குற்றாலம் அருவிக்கு செல்லும் வழியில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திலேயே சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் முதியவர்கள் அருவிக்கு செல்வதில் சிரமம் உள்ளது.
இரவு குளியல்
மேலும் குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் மட்டும் இரவு முழுவதும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பழைய குற்றாலம் அருவியில் இரவில் குளிக்க இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மட்டுமன்றி பழையகுற்றாலத்தை நம்பி வாழும் குத்தகைகாரர்கள், கடை உரிமையாளர்கள், சிறுவியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே அனைத்து அருவிகளைப்போல் பழைய குற்றாலம் அருவியிலும் 24 மணி நேரமும் குளிக்க அனுமதிக்க வேண்டும். என்று வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தென்காசி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.