வாசுதேவநல்லூர் அருகேமதுகுடிக்க பணம் தராததால் நண்பன் அடித்துக் கொலை : 2 பேர் கைது
1 min read
Friend beaten to death near Vasudevanallur for not paying for drinking: 2 arrested
15.7.2022
வாசுதேவநல்லூர் அருகே மது குடிக்க பணம் தராததால் நண்பனை அடித்துக் கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் செல்வமுருகன் (வயது 50). அதே ஊரர் காந்திநகரைச் சேர்ந்தவர் வெள்ளப்பாண்டி மகன் வெள்ளதுரை (எ) கட்டபாண்டி (40). மேலும் கீழப்புதூர் அரசமரத்து தெருவைச் சேர்ந்தவர் சண்முகையாபாண்டி மகன் குமார் (எ) குமரேசன் (47). இவர்கள் மூவரும் நண்பர்கள். எப்போதும் 3 பேரும் ஒன்றாக இருந்து மதுகுடிப்பது வழக்கம். கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மூவரும் ஒன்றாக இருந்து மது குடித்துள்ளனர்.
மதுபோதை ஏறாததால் மேலும் மதுபாட்டில் வாங்க செல்வ முருகனிடம் வெள்ளத்துரையும், குமாரும் பணம் கேட்டுள்ளனர். அதற்கு செல்வமுருகன் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் செல்வமுருகனை கீழே தள்ளி சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த செல்வமுருகன் புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் வீட்டிற்கு வந்துவிட்டார். இந்நிலையில் இன்று செல்வமுருகன் திடீரென இறந்து விட்டார்.
இச்சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மதுவுக்காக நண்பனை அடித்துக் கொலை செய்த வெள்ளத்துரை, குமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிவிகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்திப பாளை., மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து புளியங்குடி டி.எஸ்.பி., கணேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.