மத்திய பிரதேசத்தில் நதியில் பஸ் கவிழ்ந்து 13 பேர் பலி
1 min read
13 killed as bus overturns in river in Madhya Pradesh
18.7.2022
மத்திய பிரதேசத்தில், நர்மதை நதியில் பஸ் கவிழ்ந்து 13 பேர் பலியானார்கள். பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பஸ் கவிழ்ந்தது
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து மராட்டிய மாநிலம் புனேவுக்கு இன்று காலை பஸ் சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். தார் மாவட்டம் கல்கோட்டில் உள்ள நர்மதை ஆற்று பாலத்தில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பஸ் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி உயர பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது. இதையறிந்த பயணிகள் மரண பயத்தில் அலறினார்கள். ஆனால் கண் மூடி கண் திறப்பதற்குள் பஸ் ஆற்று தண்ணீரில் மூழ்கியது.
13 பேர் சாவு
இதில் பஸ்சுக்குள் சிக்கி பயணிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர் இதைபார்த்த அருகில் இருந்த கிராம மக்கள் அங்கு ஓடிவந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்து மீட்பு பணியினை மேற்கொண்டனர். ஆனாலும் ஆற்றில் மூழ்கி 13 பேர் பரிதாபமாக இறந்தனர். இவர்களில் 10 பேர் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. மற்றவர்கள் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. 15 பேர் உடனடியாக உயிருடன் மீட்கப்பட்டதாக மத்திய பிரதேச மந்திரி நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார் .
பஸ்சில் எத்தனை பயணிகள் பயணம் செய்தார்கள் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. தீயணைப்பு படை வீரர்கள் பஸ்சை மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். பஸ்சில் சென்ற பல பயணிகளை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்கள் நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என் அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளது.
விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
மோடி இரங்கல்
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
மத்திய பிரதேச மாநிலம், தார் பகுதியில் நடந்த பஸ் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. என் எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் உள்ளன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
நிவாரண நிதி
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்து உள்ளார். அதன்படி, பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.