தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது
1 min read
Electricity charges are rising in Tamil Nadu
18.7.2022
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது, 100 யூனிட் வரை இலவசம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை
மின்கட்டணம்
தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது;-
தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில் ஒரு கோடி நுகர்வோர்களுக்கு(42.19 சதவீதம்) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை. அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்று குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.
வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதியின் படி நிலை கட்டணம் 2 மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 2.37 கோடி வீட்டு மின்நுகர்வோர்கள் பயன் அடைவார்கள், தற்போது குடிசை விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டு தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
உயர்வு
2 மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63.35 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு(26.73 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.27.50-ம், 300 யூனிட்டுகள் வரை மின்நுகர்வு செய்யும் 36.25 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு(15.30 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.72.50-ம், 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு(7.94 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.147.50-ம், 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 10.56 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (4.46 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.297.50-ம், 600 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 3.14 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு(1.32 சதவீதம்) ரூ.155-ம் மட்டுமே கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
2 மாதங்களுக்கு மொத்தம் 700 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.96 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.83 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.275-ம், மொத்தம் 800 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.26 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (0.53 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.395-ம், 900 யூனிட்டுகள் வரை நுகர்வு செய்யும் 84 ஆயிரம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.35 சதவீதம்) மாதத்துக்கு ரூ.565-ம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தற்போது வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தும் மின்சாரத்தில் 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மின் கட்டணமாக மொத்தம் ரூ.1,130 வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மின் நுகர்வு 500 யூனிட்டில் இருந்து 501 ஆக அதிகரிக்கும்போது அதற்கான மின் கட்டண தொகையானது 58.10 சதவீதம் அதிகரித்து மொத்தம் ரூ.1,786 ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது. 500 யூனிட்டுகளுக்கு மேல் ஒரு யூனிட் கூடுதலாக பயன்படுத்தினாலும் மின் நுகர்வோர் கூடுதலாக ரூ.656.60 செலுத்தி வருகின்றனர். இந்த வேறுபாடுகள் முற்றிலும் களையப்பட்டு ஒரே மின் கட்டணமாக மாற்றி அமைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஊரகம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இயங்கி வரும் நூலகங்களுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.5.75 ஆகவும், நிலை கட்டணமாக மாதத்துக்கு ரூ.60 ஆகவும் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் படிக்கும் திறனை மேம்படுத்தும் விதமாக வணிக ரீதியில் இயங்காத நூலகங்களுக்கான மின் கட்டணத்தை மானியம் இல்லா வீட்டு விகிதப்பட்டியலில் கணக்கீடு அதாவது 30 சதவீதம் குறைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
93 சதவீதம் (2.26 லட்சம்) சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகர்வோர்களுக்கு, குறைந்த அளவாக யூனிட் ஒன்றுக்கு 50 காசுகள் மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 53 சதவீதம் (19.28 லட்சம்) வணிக மின் நுகர்வோர்களுக்கு மாதம் ரூ.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு சிறிய தொகையாக ரூ.1 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி நுகர்வோர்களுக்கு 750 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதற்கு மேல், யூனிட் ஒன்றுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு, தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு குறைந்த அளவில், யூனிட் ஒன்றுக்கு ரூ.1.15 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
உயர் மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தில், யூனிட் ஒன்றுக்கு 40 காசுகள் மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 65 காசுகள் மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. உயரழுத்த வணிகப் பிரிவு நுகர்வோர்களுக்கான, மின் கட்டணமானது யூனிட் ஒன்றுக்கு குறைந்த அளவாக 50 காசுகள் மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் குறைக்கப்பட்ட மின்சாரத்துக்குரிய மின் மானியத்தை நுகர்வோர் விரும்பும் பட்சத்தில் “மின் மானியத்தை தாமாக விட்டுக் கொடுக்கும்” திட்டம் மூலம் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. வீட்டு நுகர்வோர்கள் தங்கள் மின் வாகனத்தை தங்கள் வீட்டிலேயே அதே விகிதப் பட்டியலில் மின்னேற்றம் செய்து கொள்வதற்கும், அதேபோல், வணிக நுகர்வோர்கள் அதே விகிதப் பட்டியலில் பொது மின்னேற்றம் செய்வதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.