கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக இதுவரை 306 பேர் கைது
1 min read
So far 306 people have been arrested in connection with the Kallakurichi riots
20.7.2022
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக இதுவரை 306 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாணவி சாவு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தவர் மாணவி ஸ்ரீமதி(வயது 17). பள்ளி விடுதியில் தங்கி படித்த இந்த மாணவி, கடந்த 13-ந்தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்தார்.
மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையே டுவிட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று கூறி பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வந்தது. இதன் மூலமாக, மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் கனியாமூர் பகுதியில் திரண்டு போராட்டத்தில் குதித்தனர். ஒரு கட்டத்தில் இது பெரும் கலவரமாக வெடித்து, பள்ளிக்கு தீ வைத்தனர். மேலும் அங்கிருந்த பஸ்கள், வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர். அப்போது மாணவ-மாணவிகளின் சான்றிதழ்களையும் தீ வைத்துக் கொளுத்தினர். இதனால் பள்ளி வளாகம் போர்க்களமாக மாறியது.
கைது
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்தால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக இதுவரை 306 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கலவரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய 3-வது நாளாக போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் சூப்பிரண்டு
கள்ளக்குறிச்சி கலவரம் விவகாரத்தில் சரியாக நடவடிக்கை எடுக்காததால் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய கலெக்டராக ஷ்ரவன் குமார் ஜெடாவத் என்பவர் நியமனம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பகலவனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட சூப்பிரண்டாக இருந்த செல்வகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய சூப்பிரண்டு பகலவன் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்றார். இவர் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கோட்டார்பட்டி என்ற கிராமத்தைச்சேர்ந்தவர். எம்.ஏ. பொருளாதாரம் படித்தவர். 1998-ம் ஆண்டு துணை போலீஸ் சூப்பிரண்டாக தேர்வாகி தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது ஐ.பி.எஸ். அதிகாரியாக இருக்கும் இவர் டி.ஐ.ஜி. பதவி உயர்வு பட்டியலில் உள்ளார். வரும் ஜனவரியில் இவர் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெறுவார். இவர் தமிழகத்தின் வட மாவட்டங்கள் பெரும்பாலானவற்றில் சூப்பிரண்டாக சிறப்பாக பதவி வகித்துள்ளார்.