July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சீன உளவு கப்பல் இலங்கைக்கு புறப்பட்டது

1 min read

Chinese spy ship leaves for Sri Lanka to pose threat to India

5.8.2022
இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சீன உளவு கப்பல் இலங்கைக்கு புறப்பட்டது.

சீனா ஆதிக்கம்

இலங்கையில் தனது ராணுவ ஆதிக்கத்தை நிலை நிறுத்துதற்கு வசதியாக சீனா அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு சீனா அதிக அளவில் கடன் கொடுத்து உள்ளது.
இதற்கு கைமாறாக இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாகத்தை 99 ஆண்டுகள் குத்தையாக சீனாவுக்கு அளித்துள்ளது.
இது இந்திய எல்லைக்கு மிக அருகில் உள்ள துறைமுகம் ஆகும். இதையடுத்து இந்த துறைமுகத்தில் தனது உளவு கப்பலை நிறுத்துவதற்கான நடவடிக்கையினை சீனா எடுத்து வருகிறது. 1.4 பில்லியன் டாலர் ஹம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீனாவிற்கு பெரும் தொகையை செலுத்த வேண்டிய இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை இந்தியா சந்தேகிக்கின்றது. நவீன தொழில் நுட்ப ரீதியில் பல்வேறு தகவல்களை சேகரிக்கும் திறன் கொண்ட யுவான் வாங்-5 என்ற உளவு கப்பலை இந்த துறைமுகத்துக்கு சீனா அனுப்ப முடிவு செய்தது.

இந்தியா உஷார்

சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தால் இக்கப்பல் நிர்வகிக்கப்பட்டு வந்தாலும் ராணுவ ரீதியிலான பல்வேறு பயன்பாடுகளை இந்த கப்பல் கொண்டுள்ளதாகவும், நவீன தொழில் நுட்ப ரீதியில் பல்வேறு தகவல்களை சேகரிக்கும் திறன் கொண்டதாகவும் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியாவின் எல்லைக்கு அருகில் இந்த கப்பல் நிறுத்தப்படுவதால் இது பாதுகாப்பு அச்சுறுத்துலாக கருதப்படுகிறது.
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் ஏவுகணை சோதனை உள்ளிட்டவைகளை கண்காணித்து, ஏவுகணையின் செயல்பாடு குறித்து அறிந்து கொள்ளும் திறன் இந்த உளவு கப்பலுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள இக்கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானதும் இந்தியா உஷார் ஆனது. ஆரம்பம் முதலே இந்த விவகாரத்தை கவனித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து இருந்தது.
இது பற்றி இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுடன் பேசப்பட்டதாகவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் சீன உளவுக்கப்பல் இலங்கையை நோக்கி தனது பயணத்தை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இக்கப்பல் வருகிற 11 அல்லது 12-ந்தேதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்து சேரும் என தெரிகிறது. 17-ந்தேதி வரை இக்கப்பல் இந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து இந்த விவகாரத்தில் இலங்கையின் நிலைப்பாட்டை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதேசமயம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. தைவானை சுற்றி சீனா தனது படைகளை குவித்து வைத்து இருக்கும் நிலையில் தற்போது இந்தியாவை உளவு பார்க்க கப்பலை இலங்கைக்கு அனுப்பி உள்ளது மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
யுவான் வாங் கிளாஸ் கப்பல் ஆகஸ்ட் 11 அல்லது 12ம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கப்பல் செயற்கைக்கோள்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கண்காணிக்கும் திறன் கொண்டது. 400 பணியாளர்களைக் கொண்ட இந்த கப்பலில் பெரிய கண்காணிப்பு ஆண்டெனா மற்றும் பல்வேறு சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளில் நிறுத்தப்பட்டால், ஒடிசா கடற்கரையில் உள்ள வீலர் தீவில் இருந்து இந்தியாவின் ஏவுகணை சோதனைகளை இந்தக் கப்பல் கண்காணிக்க முடியும்.
இந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை கண்காணிப்பதன் மூலம், ஏவுகணைகளின் செயல்திறன் மற்றும் அவற்றின் துல்லியமான வரம்பு குறித்த தகவல்களை சீனாவால் சேகரிக்க முடியும்.
அணுசக்தி அல்லாத தளம் என்பதால் கப்பலை நிறுத்த அனுமதிப்பதாகவும்,
ஆனால் இந்தியாவின் கவலைகள் குறித்து அறிந்திருப்பதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது. யுவான் வாங் கப்பல் மலாக்காவின் பரபரப்பான நீரிணையைத் தவிர்த்து இந்தோனேசிய ஜலசந்தி வழியாக இந்தியப் பெருங்கடலில் நுழைய வாய்ப்புள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.