துணை ஜனாதிபதி தேர்தலில் ஜெகதீப் தன்கர் அமோக வெற்றி
1 min read
Jagadeep Dhankar won the vice presidential election by a landslide
6.8.2022
துணை ஜனாதிபதி தேர்தலில் ஜெகதீப் தன்கர் அமோக வெற்றி பெற்றார்.
துணை ஜனாதிபதி
இந்தியாவின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது. வாக்குப்பதிவு காலை 10 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு நிறைவடைந்தது. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். இந்த தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மேற்கு வங்காள முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கர் (71), எதிர்க்கட்சிகளின் சார்பில் மார்கரெட் ஆல்வா (80) ஆகியோர் போட்டியிட்டனர். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்ந்து 780 எம்.பி.க்கள் உள்ளனர். இதில், 725 பேர் வாக்களித்தனர். 92.94 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில், 15 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில், பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா 182 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். தேர்தல் முடிவுகளை, மக்களவை பொதுச்செயலாளர் உத்பல் குமார் சிங் அறிவித்தார். இதையடுத்து துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் பதவியேற்க உள்ளார்.