குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாட்களுக்கு பிறகு அனுமதி
1 min read
Allowed after 5 days to bathe in Courtalam waterfalls
7.8.2022
வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
குற்றாலம்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 1-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. போலீசார் அருவிகளுக்கு செல்லும் பாதையில் தடுப்புகள் வைத்து யாரும் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பு பணியில் இருந்தனர். இதனால் குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவிகளை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். குளிக்க அனுமதி இந்த நிலையில் 5 நாட்களுக்கு பிறகு நேற்று காலையில் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதைத் தொடர்ந்து இந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டார். அதன்படி சுற்றுலா பயணிகள் இந்த அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் உற்சாகமாக அருவிகளில் குளித்து சென்றனர். மெயின் அருவியில் மட்டும் வெள்ளப்பெருக்கு குறையாததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.