புதுக்கோட்டை தேர் விபத்து: கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்
1 min read
Pudukottai Chariot Accident: Removal of Temple Executive Officer
10.8.2022
புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவில் தேர் விபத்து தொடர்பாக கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவில் தேர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குடவரை கோவில்களில் ஒன்று திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேசுவரர் கோவில் ஆகும். தொண்டைமான் மன்னர் காலத்தில் அவர்களது குல தெய்வமாக இக்கோவில் விளங்கியது. இக்கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் வெவ்வேறு அலங்காரத்தில் சாமி புறப்பாடு நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத்தையொட்டி தேரோட்டம் கடந்த 31-ம் தேதி நடைபெற்றது. அப்போது தேர் நிலையில் இருந்து புறப்பட்ட உடனே சிறிது நேரத்தில் முன்பக்கமாக தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அதில் அரிமலம் பகுதியை சேர்ந்த ராஜகுமாரி (வயது 59) என்பவர் சிகிச்சை பலனின்றி கடந்த 2 தினங்களுக்கு முன் உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
பணியிடை நீக்கம்
இந்த நிலையில், புதுக்கோட்டை, பிரகதாம்பாள் கோவில் தேர் விபத்தில் ஒருவர் பலியான விவகாரம் தொடர்பாக மேற்பார்வையாளர் மாரிமுத்து என்பவரை கோவில் பொறுப்பில் இருந்து விடுவித்தனர். மேலும் புதிய மேற்பார்வையாளராக தட்சிணாமூர்த்தி என்பவர் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது இந்த சமய அறநிலையத்துறை, புதுக்கோட்டை மாவட்ட திருக்கோவில்களின் செயல் அலுவலராக பணியாற்றி வரும் ராமமூர்த்தி என்பவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது. தேர் விபத்தின் போது செயல் அலுவலர் மிகவும் அஜாக்கிரதையாக செயல்பட்டதாகவும் தேரின் உறுதித்தன்மையை உறுதி செய்யவில்லை என்றும் கூறி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளார். அவருக்குப் பதிலாக பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் செயல் அலுவலர் புதுக்கோட்டை மாவட்ட செயல் அலுவலராக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.