கியூட் இளநிலை தேர்வுக்கான நுழைவு அட்டைகள் வரும் 20-ந்தேதி வெளியீடு
1 min read
20-date release of Cute Undergraduate Admit Cards
13.8.2022
கியூட் இளநிலை தேர்வுக்கான நுழைவு அட்டைகள் வரும் 20-ந்தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கியூட் நுழைவுத தேர்வு
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்துகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான இளங்கலை படிப்புக்கான கியூட் தேர்வு கடந்த 4-ந்தேதி காலையிலும், மாலையிலும் 2 ஷிப்டுகளாக நடந்தது. தொழில்நுட்ப மற்றும் நிர்வாக குளறுபடிகளால் 17 மாநிலங்களில் சில மையங்களில் முதல் ஷிப்ட் தேர்வு 12-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. மாலையில் நடக்க இருந்த தேர்வு, மொத்தம் உள்ள 489 மையங்களிலும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், 5-ந்தேதி நடந்த தேர்வின்போது, தொழில்நுட்ப குளறுபடியால் தேர்வு பாதிக்கப்பட்டது. ஆனால், காலையில் 95 சதவீத மையங்களில் தேர்வு சுமுகமாக நடந்ததாக தேசிய தேர்வு முகமை கூறியது. எனினும், நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வானது 2-வது நாளாக 50 மையங்களில் தள்ளி வைக்கப்பட்டது.
இதனால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள செய்தியில், நிர்வாக கோளாறுகளால் தேர்வு ரத்து செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்காக, தேர்வானது வருகிற 24 முதல் 28 வரையிலான தேதிகளில் மீண்டும் நடத்தப்படுகிறது என தெரிவித்து உள்ளது. இதற்காக தேர்வு எழுதுபவர்களுக்கு புதிய நுழைவு அட்டைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது. இதுபற்றி வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஆகஸ்டு 4 முதல் 6 வரையிலான நாட்களில் நடைபெற இருந்த 2-வது கட்ட தேர்வு நிர்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்களுக்காக சில மையங்களில் ஒத்தி வைக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, அந்த தேர்வுகள் ஆகஸ்டு 12-14 ஆகிய நாட்களில் நடைபெறும் என முன்பு அறிவித்தோம். எனினும், தேர்வு எழுதுபவர்களில் பலர் எங்களை அணுகி, அந்த நாட்களில் தேர்வை நடத்த வேண்டாம் என்றும், தொடர்ச்சியாக பண்டிகை நாட்கள் வருகின்றன என்றும் தெரிவித்தனர். அதனால், அந்த தேர்வுகளை ஆகஸ்டு 24 முதல் 28 வரையிலான தேதிகளில் மீண்டும் நடத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. தேர்வு தேதிக்கு முன்பு அதற்கான புதிய நுழைவு அட்டைகள் வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், இரண்டாம் கட்ட கியூட் இளநிலை தேர்வு எழுத முடியாதவர்கள், 6-ம் கட்டத்தில் வருகிற 24 முதல் 30 வரையிலான நாட்களில் நடத்தப்படும் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கான நுழைவு அட்டைகள் வரும் 20-ந்தேதி வெளியிடப்படும். அவர்கள் தேர்வு எழுதுவதற்கான நகரங்கள் மற்றும் தேர்வு நாட்கள் பற்றிய விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.