July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நல்லடக்கம்

1 min read

Army soldier Lakshmanan died after 21 bullets

13.8.2022
வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தும்மக்குண்டு ஊராட்சி டி.புதுப்பட்டியை சேர்ந்த தர்மராஜ்-ஆண்டாள் தம்பதியின் இளைய மகன் லட்சுமணன் (வயது 22). ராணுவவீரரான இவர் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்தார். கடந்த வியாழக்கிழமை ரஜ்ஜவுரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவ வீரர்கள் அங்கு முகாமிட்டு பயங்கரவாதிகளை சரணடையுமாறு எச்சரித்தனர். அப்போது இரு தரப்புக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர் லட்சுமணன் உள்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தியபின் இன்று காலை (13-ந் தேதி) தனி விமானம் மூலம் அவரது உடல் ஐதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அடக்கம்

பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் இன்று மதியம் 12.15 மணிக்கு மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித்சிங் கலோன், போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மேயர் இந்திராணி, துணைமேயர் நாகராஜன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் ராணுவ உயர் அதிகாரி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து ராணுவ வாகனத்தில் லட்சுமணனின் உடல் டி.புதுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு பொற்றோர்கள், உறவினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட 20 லட்சம் ரூபாய்கான காசோலை மாவட்ட நிர்வாகம் சார்பில் லட்சுமணனின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து லட்சுமணனின் உடல் அடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று ராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து இந்திய ராணுவத்தின் சார்பில் 21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து முழு ராணுவ மரியாதையுடன் லட்சுமணனின் உடல் அவரது சொந்த இடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.