இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி
1 min read
Sri Lanka approves Chinese spy ship despite India’s opposition
13.8.2022
சீனாவின் ‘யுவான் வாங்-5’ என்ற உளவு கப்பலை அம்பந்தொட்டை துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அனுமதி அளித்துள்ளது.
சீன உளவு கப்பல்
சீன உளவு கப்பல் ‘யுவான் வாங்-5’ கடந்த 11-ந் தேதி இலங்கையின் அம்பந்தொட்டை துறைமுகத்துக்கு வருவதாக இருந்தது. 17-ந் தேதி வரை அங்கேயே நங்கூரமிட்டு நிறுத்தப்படும் என்று கூறப்பட்டது. எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட காரணங்களுக்காக அக்கப்பல் வருவதாக கூறப்பட்டது. இருப்பினும், அது உளவு பார்க்க வாய்ப்புள்ளதால் அதன் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அதையடுத்து, கப்பலின் வருகையை தள்ளிப்போடுமாறு சீனாவிடம் இலங்கை கூறியது. ஆனால் அதற்குள் சீன உளவு கப்பல், இந்திய பெருங்கடலில் நுழைந்து விட்டது. எதிர்பார்த்தபடி, சீன உளவு கப்பல் அம்பந்தொட்டை துறைமுகத்துக்கு வரவில்லை. அம்பந்தொட்டையில் இருந்து 600 கடல் மைல் தொலைவில் அனுமதியை எதிர்பார்த்து அக்கப்பல் காத்திருப்பதாக தகவல் வெளியானது.
அனுமதி
இந்த நிலையில், சீன உளவு கப்பலுக்கு இலங்கை மீண்டும் அனுமதி அளித்தது. சீன அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் இது தொடர்பாக பேசியதாக தகவல் வெளியான நிலையில் அம்பந்தொட்டை துறைமுகத்தில் கப்பலை நிறுத்த இலங்கை அரசு அனுமதி கொடுத்துள்ளது.