பேராசிரியர்கள் துன்புறுத்தல்; ஆந்திராவில் நர்சிங் படித்த வேலூர் மாணவி தற்கொலை
1 min read
harassment of professors; Nursing student commits suicide in Vellore in Andhra Pradesh
14/8/2022
ஆந்திராவில் பேராசிரியர்கள் துன்புறுத்தியதால் நர்சிங் படித்த வேலூர் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
நர்சிங் மாணவி
வேலூர் மாவட்டம், குடியாத்தம் டவுன் காமாட்சியம்மன் பேட்டை காமாட்சி அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன். நகை செய்யும் தொழிலாளி. இவரது மகள் கார்த்திகாதேவி (வயது 21). இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அரகொண்டா பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் மாணவி கார்த்திகாதேவிக்கு கல்லூரி துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்கள் தொடர்ந்து பல்வேறு வகையில் டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் பாடப்பிரிவுகளில் பெயில் செய்து விடுவோம் என மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கார்த்திகா தேவி அவரது பெற்றோருக்கு போன் செய்து நடந்ததை கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவரது பெற்றோர்கள் நேற்று அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை கார்த்திகா தேவி வீட்டில் ஒரு அறையில் புடவையால் தூக்குப்போட்ட நிலையில் இருந்துள்ளார். இதனை கண்ட பெற்றோர்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாநிலம் விட்டு மாநிலம் சென்று படிக்கும் தமிழக மாணவிகளை அங்கு கல்லூரி விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள் பல்வேறு வகைகளில் டார்ச்சர்கள் செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே நர்சிங் மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக மாணவி கார்த்திகா தேவிக்கு கல்லூரியில் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்த துறை தலைவர், பேராசிரியர்கள் மீது சித்தூர் மாவட்ட காவல் துறையிலும், நர்சிங் கல்லூரி அமைந்துள்ள காவல் நிலைய எல்லை பகுதியான தவனம்பல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்க மாணவியன் உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.