ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் அறிக்கை முதல்வரிடம் தாக்கல்
1 min read
Smart City Project Scam Report Submitted to Chief Minister
20/8/2022
ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் அறிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி திட்டம்
கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசு சார்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் புதிய நகரை நவீன முறையில் உருவாக்குவது இலக்காக இருந்தாலும் ஏற்கனவே உள்ள நகரை தொழில்நுட்ப ரீதியில் மறுசீரமைப்பது என்ற வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் சூழலில் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்தத் திட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் 100 நகரங்களை தேர்வு செய்து ஸ்மார்ட் சிட்டிகளாக மாற்ற திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக தமிழகத்தில் 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான செலவில் 50 சதவிகிதம் மத்திய அரசும், 50 சதவிகிதம் மாநில அரசும் பகிர்ந்து கொள்கின்றன.
இதனிடையே கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக சென்னை தியாகராய நகரில் மழைநீர் தேங்கியது. இதற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் சரியாக வடிவமைக்காததே காரணம் என்று திமுக குற்றம்சாட்டியது. மேலும், இத்திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.
மு.க.ஸ்டாலின் ஆய்வு
இதனைத்தொடர்ந்து மழைநீர் தேங்கிய இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்தது.
இந்தக் குழு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.
அறிக்கை தாக்கல்
கடந்த மே மாதத்தில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு, ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்ற பல்வேறு நகரங்களில் விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான அறிக்கையை விசாரணை ஆணைய தலைவரான டேவிதர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்தார்.