அமெரிக்காவில் பிரபல காபி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியர் தேர்வு
1 min read
An Indian has been selected as the CEO of a famous coffee company in the US
4.9.2022
அமெரிக்காவில் பிரபல காபி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த லட்சுமணன் நரசிம்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காபி நிறுவனம்
உலகளவில் பிரபலமான அமெரிக்காவின் ‘ஸ்டார்பக்ஸ்’ காபி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த வர்த்தக ஆலோசகரான லட்சுமணன் நரசிம்மன் (வயது 55) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 55 வயதான லட்சுமணன் நரசிம்மன் இதற்கு முன் இங்கிலாந்தை சேர்ந்த பன்னாட்டு நுகர்வோர் சுகாதார நிறுவனமான ‘ரெக்கிட் பென்கிசர்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். சமீபத்தில் அவர் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். தற்போது இங்கிலாந்தில் இருக்கும் அவர் ‘ஸ்டார்பக்ஸ்’ நிறுவனத்தில் இணைவதற்காக விரைவில் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்வார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லட்சுமணன் நரசிம்மன் வருகிற அக்டோபர் மாதம் முதல் தேதியில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் இணைவார் என்றும் அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்று கொள்வார் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.