அதிக கல்வி நிறுவனங்கள் முதன் முதலில் உருவானது நெல்லையில் தான்- மு.க.ஸ்டாலின் புகழாரம்
1 min read
Most of the educational institutions were first established in Nellie – praise of M.K.Stalin
8.9.2022
அதிக கல்வி நிறுவனங்கள் முதன் முதலில் உருவானது நெல்லையில் தான் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நலத்திட்டங்கள்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன்படி நெல்லையில் இன்று நடைபெற்ற பிரமாண்டமான அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவ்விழாவில் முடிவுற்ற பல்வேறு பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நெல்லை
இலக்கியம், கலை, வரலாறு, வீரம், ஆன்மிகம் என அனைத்திற்கும் பெயர் பெற்றது நெல்லை மாவட்டம். அதிக கல்வி நிறுவனங்கள் முதன்முதலில் உருவானது நெல்லையில்தான். நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், மக்களின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த மணிமுத்தாறு அணை அருகில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும்.
மேலும், வாழை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, களக்காட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வாழை ஏல மையம் அமைக்கப்படும். நெல்லை மாவட்டத்தின் கடற்கரையோரப் பகுதிகளில், விளையாட்டு வீரர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களை ஊக்குவிக்கும் வகையில், ராதாபுரத்தில் விளையாட்டரங்கம் மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும் .
நெல்லை மக்களின் நீண்டகால கோரிக்கையான நெல்லை மாநகர மேற்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான நில எடுப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர், மேற்கு புறவழிச்சாலை 370 கோடி மதிப்பீட்டில், 3 கட்டங்களாக அமைக்கப்படும். தமிழகத்தில் முதன்முறையாக நெல்லை மாவட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் முழு உடல்நல ஆலோசனை மற்றும் சிகிச்சை குறித்த பராமரிப்புகளுக்காக டிஜிட்டல் பதிவேடு பராமரிக்கப்பட்டு, கர்ப்பிணி தாய்மார்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களது முழு உடல் பரிசோதனை விவரங்கள் டிஜிட்டல் முறையில் பராமரிக்கப்படும். கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழப்புகளைத் தடுப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.