“காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற முடியாது”- குலாம் நபி ஆசாத் பேச்சு
1 min read
“Kashmir’s special status cannot be withdrawn”- Ghulam Nabi Azad speech
11.9.2022
அடுத்த 10 நாட்களுக்குள் புதிய கட்சி தொடர்பாக அறிவிப்பை வெளியிட உள்ளதாக குலாம் நபி ஆசாத் கூறினார். மேலும் அவர் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற முடியாது என்றும் கூறினார்.
குலாம்நபி ஆசாத்
காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேல் இருந்த 73 வயதான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆகஸ்ட் 26ல் கட்சியில் இருந்து விலகினார்.
மேலும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரியான குலாம் நபி ஆசாத், விரைவில் புதிய கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பிறகு முதல் முறையாக நேற்று காஷ்மீரின் பராமுல்லா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குலாம் நபி ஆசாத் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
சிறப்பு அந்தஸ்து
அடுத்த 10 நாட்களுக்குள் புதிய கட்சி தொடர்பாக அறிவிப்பை வெளியிட உள்ளேன். வெறும் ஓட்டுகளுக்காக மக்களை ஏமாற்றப்போவது இல்லை. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற முடியாது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. அதே சமயம் காங்கிரஸ் கட்சி சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள எந்த ஒரு கட்சியும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை திரும்ப கொண்டு வர முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்து கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.