கல்வித் தரத்தை மேம்படுத்த துறைசார்ந்த புதிய பதவிகள் உருவாக்கம் – அரசாணை வெளியீடு
1 min read
Creation of Departmental New Posts to Improve Education Quality – Ordinance Issuance
17.9.2022
கல்வித் தரத்தை மேம்படுத்த துறைசார்ந்த புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு பள்ளிக்கல்வித் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதிய பதவி
தொடக்கக் கல்விக்கு பிரத்தியேக மாவட்ட அளவிலான அலுவலர் இல்லாததால், அங்கு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதால், அதனை தக்கவைக்கவும், பணிகள் தொய்வின்றி நடக்கவும் தொடக்கப் பள்ளி அளவில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை உருவாக்க பள்ளிக்கல்வித்துறை கமிஷனர் அரசிடம் கேட்டு இருந்தார். இதுதவிர, சிறுபான்மை பள்ளிகளை கண்காணிக்கும் வகையில் பள்ளிகள் மற்றும் தொகுதி கல்வி அலுவலர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தேவைக்கேற்ப புதிய வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை உருவாக்கவும், அரசு உதவிபெறாத பள்ளிகளை திறம்பட ஒழுங்குப்படுத்த மாவட்டக்கல்வி அலுவலர் என்ற தனிப்பணியிடமும் உருவாக்க பள்ளிக்கல்வித்துறை கமிஷனர் அரசிடம் கேட்டுள்ளார்.
மேலும் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தேவைகளுக்கு ஏற்றபடி, நிர்வாகத்தை வழங்குவதை நோக்கமாக கொண்ட செயல்பாடுகளை மேற்கொள்ளவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டும் பள்ளிக்கல்வித்துறையை மறுசீரமைத்து தகுத்த உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கல்வித்துறை அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. இதனை அரசு கவனமாக ஆய்வு செய்த பின்னர், 2 துணை இயக்குனர் பதவிகள்(தனியார் பள்ளிகள் இயக்ககத்துக்கு ஒன்று, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு ஒன்று), 32 மாவட்டக் கல்வி அலுவலர் பதவிகள், 15 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள், 16 தனி உதவியாளர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளாக மாற்றி பணியிடங்கள், 86 கண்காணிப்பாளர் நிலை பணியிடங்கள், சமக்ரா சிக்ஷாவில் உள்ள 2 இணை இயக்குனர் பதவிகளை மாற்றி, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகத்துக்கு தலா ஒரு இணை இயக்குனர் பதவிகள் உருவாக்கப்படுகின்றன.
மேற்கண்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.