மதுரை விடுதியில் பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்த பெண், டாக்டருடன் கைது
1 min read
Woman who took video of women changing clothes in Madurai hostel, arrested along with doctor
25.9.2022
மதுரையில் விடுதியில் சக பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து டாக்டருக்கு அனுப்பிய சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விடுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் ஆசிக் (வயது 31). இவர் எம்பிபிஎஸ் படித்து முடித்துவிட்டு கமுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். ஆசிக்கிற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில், இவரது கிளினிக் அருகேயுள்ள காளீஸ்வரி என்பவர் மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, பி.எட் படித்து வருகிறார்.
ஆசிக்கும், காளீஸ்வரியும் நீண்ட நாட்களாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
குளிக்கும் படம்
இந்நிலையில், காளீஸ்வரி தன்னுடன் தங்கியுள்ள விடுதி பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் பிடித்து ஆசிக்கிற்கு அனுப்பிவந்துள்ளார். மேலும் பெண்கள் உடை மாற்றும் காட்சிகள் மற்றும் புகைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளார்.
இது குறித்து தெரியவந்ததும் பெண் ஒருவர் விடுதி காப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் காளீஸ்வரியின் செல்பேனை பார்த்தபோது இந்த சம்பவம் வெளியில் தெரியவந்தது. இதையடுத்து, விடுதியின் மேலாளர் மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.
கைது
போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் செல்போனில் பெண்கள் குளியல் காட்சிகள் மற்றும் உடைமாற்றும் காட்சிகள் பகிரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஆசிக் மற்றும் காளீஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.