தென்காசி பகுதியில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள், கஞ்சா சிக்கியது
4 பேர் கைது
1 min read

Counterfeit notes, ganja busted in Tenkasi area- 4 arrested
11.10.2022
தென்காசி மாவட்டம், தென்காசி மற்றும் செங்கோட்டை பகுதியில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.4,25,000 கள்ள நோட்டுகள் மற்றும் 4 கிலோ கஞ்சா வைத்திருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதுபோன்ற வேட்டை தொடரும் என ஏடிஎஸ்பி சார்லஸ் கலைமணி தெரிவித்துள்ளார்.
கள்ளநோட்டு
தென்காசி காவல் நிலையத்தில் வைத்து ஏடிஎஸ்பி சார்லஸ் கலைமணி நேற்று பத்திரிகையாளர் களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.கிருஷ்ணராஜ் உத்தரவின்படி தென்காசி உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் மணிமாறன் மேற்பார்வையில் தென்காசி காவல் நிலைய காவல் ஆய்வாளர் கே எஸ். பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் கற்பக ராஜா, பயிற்சி உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரன், மற்றும் காவலர்கள் தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தென்காசி உடையார் தெருவை சேர்ந்த ராஜா என்பவரது மகன் மணிச்செல்வன் (வயது 28) மற்றும் செங்கோட்டை பெரியப்பிள்ளை வலசை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அனஞ்ச கொம்பு மகன் மணிகண்டன் 24) ஆகியோர் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தபோது அவர்களை காவல் ஆய்வாளர்
கே.எஸ்.பாலமுருகன் பிடித்து விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்து ரூபாய் 1,20,000 மதிப்புள்ள சுமார் 4 கிலோ கஞ்சா மற்றும் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளும் கைப்பற்றப்பட்டது.
கைது
இதேபோல் செங்கோட்டையில் காவல் ஆய்வாளர் ஷியாம் சுந்தர் தலைமையில் தெற்கு மேடு கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் மகன் பிரகலாதன் (வயது 31), செங்கோட்டை விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் மாரிமுத்து (வயது 35) ஆகியோரிடம் இருந்து ரூபாய் 2,25,000 மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நேற்று ஒரே நாளில் ரூபாய் 4,25,000 கள்ள நோட்டும், 4 கிலோ கஞ்சாவும் பிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி நான்கு நபர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் தென்காசி மாவட்டத்தில் இது தொடர்பான வேட்டை தொடரும்.
இவ்வாறு ஏ டி எஸ் பி சார்லஸ் கலைமணி தெரிவித்தார்.
இதில் சிறப்பாக பணிபுரிந்து கள்ள நோட்டு கும்பலையும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களையும் கைது செய்த காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களை தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், ஏடிஎஸ்பி சார்லஸ் கலைமணி ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.