சத்தீஷ்காரில் அமலாக்க துறை அதிரடி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல்
1 min read
Rs 4 crore seized in Chhattisgarh enforcement department raid
12.10.2022
சத்தீஷ்காரில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தொழிலதிபர்கள் வீடுகளில் அமலாக்க துறை நடத்திய அதிரடி சோதனையில் ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
அமலாக்கத்துறை சோதனை
சத்தீஷ்காரில் ராய்ப்பூர், ராய்கார், மகாசமந்த், கோர்பா மற்றும் பிற மாவட்டங்களில் அமலாக்க துறையினர் கடந்த செவ்வாய்க்கிழமை பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று மூத்த அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். எனினும், இதுபற்றி விரிவாக ஊடகங்களுக்கு எதுவும் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
இந்நிலையில், இந்த சோதனையில் ரூ.4 கோடி ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர, கணக்கில் வராத நகைகள் மற்றும் தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் இடங்களில் இருந்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
ரூ.500 கோடி
இந்த சட்டவிரோத பணத்தின் மொத்த மதிப்பு ரூ.500 கோடி என அதிகாரிகள் கூறியுள்ளனர். நிலக்கரி சப்ளை செய்பவர்களிடம் இருந்து அரசு மூத்த அதிகாரிகள், மிரட்டி பணம் பெற்றுள்ளனர் என்றும் அமலாக்க துறை தெரிவித்து உள்ளது. இதன்படி, அவர்களிடம் இருந்து தங்கம், நகைகள், பணம் என மொத்தம் ரூ.500 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.