July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

கர்நாடகாவில் ஹிஜாப்பிற்கான தடை தொடரும்- மந்திரி நாகேஷ் பேட்டி

1 min read

Hijab ban will continue in Karnataka – Minister Nagesh interview

13/10/2022
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய கர்நாடகா ஐகோர்ட்டு விதித்த தடை உத்தரவு தொடரும் என அந்த மாநில கல்வித் துறை மந்திரி பி.சி.நாகேஷ் கூறியுள்ளார்.

ஹிஜாப் பிரச்சினை

கர்நாடகா கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக இந்துத்துவ மாணவர்கள் ஹிஜாப்பிற்கு தடை விதிக்க கோரி பிரச்சினை எழுப்பினர். ஒரு கல்லூரிக்கு வந்த மாணவியை ஹிஜாப் அணிந்து கொண்டு உள்ளே விட மாட்டோம் என இந்துத்துவ மாணவர்கள் கூறியதால் பரபரப்பு எழுந்தது. மேலும் அவர்கள் காவி நிற ஸ்கார்ஃபை கழுத்தில் அணிந்து வந்ததும் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் கர்நாடகாவில் கல்வி நிலையங்களுக்கு சில நாட்கள் விடுப்பு விடப்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு சீருடையில் மட்டுமே மாணவ, மாணவிகள் வர வேண்டும் என கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி மாநில அரசு உத்தரவிட்டது. இதையடுத்து வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி மாநில ஐகோர்ட்டில் கல்லூரி மாணவிகள் உள்பட பலர் மனுதாக்கல் செய்திருந்தனர்.

தடை

அந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு வகுப்பறைகளில் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதித்து கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மாணவிகள் சிலர் மனுதாக்கல் செய்தனர். அவர்களின் மனுக்கள் மீதான வாத பிரதிவாதங்கள் 10 நாட்கள் நடந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைப்பதாக கடந்த மாதம் 22 ஆம் தேதி நீதிமன்றம் அறிவித்தது.
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று வெளியிட்டது.
அதில் ஹிஜாப் தடை செல்லும் என்றும் ஹிஜாப் அணிய கர்நாடகா ஐகோர்ட்டின் தடை செல்லாது என்றும் இரு வேறு தீர்ப்புகளை நீதிபதிகள் அறிவித்தனர். இதனால் இந்த வழக்கு கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

தொடரும்

இந்தநிலையில் அம்மாநில கல்வித் துறை மந்திரி பி.சி.நாகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறோம். உலகெங்கிலும் உள்ள பெண்கள் ஹிஜாப்/புர்கா அணிய வேண்டாம் என்று கோரி வருவதால், சிறந்த தீர்ப்பை நாங்கள் எதிர்பார்த்தோம். கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு இடைக்காலத்திலும் பொருந்தும்; மாநிலத்தின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீடிக்கிறது. பெண்களின் விடுதலை பற்றி பேசும் காலம் இது. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய கர்நாடக ஐகோர்ட்டு தடை விதித்த உத்தரவு தொடரும். பள்ளி, கல்லூரி உள்ளிட்ட எந்த கல்வி நிலையங்களிலும் எந்தஒரு மத அடையாள சின்னங்களுக்கும் அனுமதியில்லை என தெரிவித்துள்ளார். இவ்வ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.