தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வுக்கு தடையில்லை- சுப்ரீம் கோர்ட்டு
1 min read
There is no ban on electricity tariff hike in Tamil Nadu- Supreme Court
14.10.2022
தமிழ்நாடு அரசு அறிவித்த மிக்சாரக்கட்டண உயர்வுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதிக்க மறுத்துவிட்டது.
மின்சாரக்கட்டணம்
தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் உயர்த்தி யுள்ளது. தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
2021-22-ல் மின்சார வாரியத்தின் மொத்த கடன் ரூ.1.58 லட்சம் கோடி. 2021-22-ல் மின்வாரியம் கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டித் தொகை ரூ.16,511 கோடி. ஆகையால் மின் கட்டண உயர்வுதான் தீர்வு என்கிறது மின்சார வாரியம்.
அத்துடன் தமிழக மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அரசு வலியுறுத்தியது. தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று 28 முறை ஒன்றிய அரசு கடிதம் எழுதியது. இதனால் தமிழ்நாடு அரசும் மின் கட்டணத்தை உயர்த்தியது.
வழக்கு
ஆனால் மின் கட்டண உயர்வுக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் மனுத் தாக்கல் செய்தார். அதில், “மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர், 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால் தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டுமே உள்ளனர். சட்டத்துறை உறுப்பினர் இல்லை. இந்த நியமனம் மேற்கொள்ளப்படும் வரை மின் கட்டண உயர்வை அமல்படுத்தக் கூடாது” என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தொழில்நுட்ப உறுப்பினர் காலி இடத்தை தமிழ்நாடு அரசு நியமித்திருக்கலாம். மின்சார ஒழுங்கு முறை ஆணைய சட்ட உறுப்பினர் நியமிக்கப்படும் வரையில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
தடை நீக்கம்
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இம்மேல்முறையீட்டு மனுவை 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து மின்கட்டண உயர்வுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டது.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நூற்பாலைகள் சங்கம் மேல்முறையீடு செய்தது. தமிழ்நாடு மின்சார வாரியமும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்து, இம் மேல்முறையீட்டு வழக்கில் தங்களது தரப்பு கருத்தை கேட்க வேண்டும் என கோரியிருந்தது.
மறுப்பு
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. அத்துடன் மின்சார வாரியத்தில் சட்டத்துறை அதிகாரி அல்லது சட்ட உறுப்பினரை 3 மாத காலத்தில் நியமிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.