July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தி திணிப்பு முயற்சியை கைவிடக் கோரி பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

1 min read

First Minister M.K.Stal’s letter to Prime Minister Modi requesting him to abandon the attempt to impose Hindi

16.10.2022
இந்தி திணிப்பு முயற்சியை கைவிடக் கோரி பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதம்

இந்தி திணிப்பு முயற்சியை கைவிடக் கோரி பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளதாவது:-

உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களது தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு, குடியரசுத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்துள்ள தனது அறிக்கையில், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை இடம்பெறச் செய்ய வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி நிறுவனங்கள்

அதேபோன்று, இந்தியைப் பொது மொழியாக்கிடும் வகையில், தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட ஒன்றிய அரசின் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழியே பயிற்று மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதையும் அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இளைஞர்கள் இந்தி படித்திருந்தால் மட்டுமே சில வேலைகளுக்குத் தகுதி பெறுவார்கள் என்றும், ஆட்சேர்ப்பிற்கான தேர்வின்போது, கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, இந்தியை முதன்மைப்படுத்தும் வகையில் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், இவையனைத்தும் நமது அரசியலமைப்பின் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரானவை என்றும், நமது தேசத்தின் பன்மொழிக் கட்டமைப்பிற்கு தீங்கு விளைவிப்பதாக அமைந்திடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில், தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன என்றும், இவை அனைத்தும் சம உரிமையைக் கொண்ட மொழிகள் என்றும், இந்த அட்டவணையில் இன்னும் சில மொழிகளும் சேர்க்கப்பட வேண்டும் என்று பல கோரிக்கைகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஒன்றியத்தில் இந்தி பேசுகிற மக்களின் எண்ணிக்கையைவிட, இந்தி அல்லாத மற்ற மொழிகளைப் பேசுகிற மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் அவர்கள், ஒவ்வொரு மொழிக்கும் அதற்குரிய சிறப்பு இருக்கிறது; தனித்துவம் இருக்கிறது; மொழிவழிப் பண்பாடு இருக்கிறது என்றும், இந்தி ஆதிக்கத்திலிருந்து நமது வளமான மற்றும் தனித்துவமான மொழிகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன்தான், ஆங்கிலம் இணைப்பு மொழியாக ஆக்கப்பட்டு, ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக நீடிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி, அனைத்து மாநில மொழிகளின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமிழ்நாடு தொடர்ந்து வலுவாகக் குரல் கொடுத்து வருகிறது என்றும், 1965 ஆம் ஆண்டில் இந்தித் திணிப்புக்கு எதிராகவும், தாய்மொழியான தமிழைப் பாதுகாக்கவும் தமிழ்நாட்டில் கிளர்ந்தெழுந்த மொழிப்போரில் பல தீரமிகு இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர் என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், அவர்களுடைய உணர்வுகளை மதித்து, இந்திய ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொண்ட அப்போதைய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள், ‘இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை, ஆங்கிலமும் தொடர்ந்து அலுவல் மொழிகளில் ஒன்றாக இருக்கும்’ என்று உறுதியளித்ததை குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, 1968 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில், அலுவல் மொழி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதனடிப்படையில் வரையறுக்கப்பட்ட விதிகளின்படி, ஒன்றிய அரசுப் பணிகளில், ஆங்கிலம் மற்றும் இந்தி என இரு மொழிகளையும் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டதை முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டு, இந்த நிலைப்பாடு தொடர்ந்து அனைத்து நிலைகளிலும் நீடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியைத் திணிப்பதற்கான சமீபத்திய முயற்சிகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை என்றும் அவை நாட்டினை பிளவுபடுத்தும் தன்மை கொண்டவை என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், இது இந்தி பேசாத மக்களை பல விஷயங்களில் இரண்டாந்தர குடிமக்கள் போல பிரித்தாளுகின்ற தன்மை கொண்டவை என்றும், இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; தாய்மொழியைப் போற்றும் எந்த மாநிலத்திற்கும் ஏற்புடையதாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்றும், அனைத்து மொழிகளும் ஒன்றிய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டுமென்றும் அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார். வளமான மற்றும் பல்வேறுபட்ட கலாச்சாரப் பன்முகத்தன்மையை, அந்தந்த தனித்துவமான மொழியியல் சுவைகளுடன் ஊக்குவிப்பது என்பது, இந்தியத் துணைக்கண்டத்தின் பெருமையும் வலிமையும் ஆகும் என்றும், இது உலக அரங்கில் பலவித பண்பாடுகள் மற்றும் மொழிகள் கொண்ட ஜனநாயக நாடுகளுக்கு ஒரு வலுவான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ‘ஒரே நாடு’ என்ற பெயரில், இந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகள், பல்வேறு மொழிகள் மற்றும் பண்பாடுகளைக் கொண்ட இந்திய மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதை சிதைப்பதோடு, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைப்பதாக அமைந்திடும் என தாம் அஞ்சுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வசதிகளைக் கருத்தில் கொண்டு, தமிழ் உட்பட அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக எட்டாவது அட்டவணையில் சேர்ப்பதும், அனைத்து மொழிகளையும் ஊக்குவிப்பதும், அனைத்து மொழிகளைப் பேசுவோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பினை வழங்கி முன்னேற்றத்திற்கான வழிகளை அனைவருக்கும் திறப்பதும்தான் ஒன்றிய அரசின் அணுகுமுறையாக இருக்க வேண்டும் என்று தான் பரிந்துரைப்பதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், பல்வேறு வழிகளில் இந்தியைத் திணிக்கும் வகையில் அமைந்துள்ள அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை மேலும் முன்னெடுத்துச் செல்லாமல், பெருமைவாய்ந்த இந்திய ஒற்றுமைச் சுடரைத் தொடர்ந்து ஒளிரச் செய்ய வேண்டுமென்று தான் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.