கேரள நரபலி இறைச்சி பெங்களூருவில் விற்கப்பட்டதா?
1 min read
Kerala sacrificial meat sold in Bengaluru?
17.10.2022
நர மாமிசத்தை பிரிட்ஜில் பாதுகாத்தது ஏன்? என்பது பற்றி போலீசார் விசாரித்தபோது அவற்றை பெங்களூருவில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
நரபலி
கேரளாவில் தர்மபுரியை சேர்ந்த பெண் பத்மா உள்பட 2 பேர் நரபலி கொடுக்கப்பட்டனர். இது தொடர்பாக கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து எர்ணாகுளத்தை சேர்ந்த மந்திரவாதி முகமது ஷாபி மற்றும் அவரது கூட்டாளி பகவல் சிங், பகவல் சிங்கின் மனைவி லைலா ஆகியோரை கைது செய்தனர்.
கைதானவர்களை போலீசார் 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். இதில் ஒவ்வொரு நாளும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
முதல்கட்ட விசாரணையில் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி என்ற பெண்ணை சில மாதங்களுக்கு முன்பும், பத்மாவை கடந்த மாதமும் நரபலி கொடுத்ததாக 3 பேரும் தெரிவித்தனர். மேலும் நரபலி கொடுக்கும் முன்பு பெண்களை வைத்து நிர்வாண பூஜை நடத்தியதையும் ஒப்புக்கொண்டனர்.
நர மாமிசம்
அதன்பின்பு அவர்களின் மர்ம உறுப்புகளை தனித்தனியாக வெட்டி எடுத்து சில உடல் பாகங்களையும், நர மாமிசத்தையும் பிரிட்ஜில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். அவற்றை போலீசார் மீட்டு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
நர மாமிசத்தை பிரிட்ஜில் பாதுகாத்தது ஏன்? என்பது பற்றி போலீசார் விசாரித்தபோது அவற்றை பெங்களூருவில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து நரமாமிசத்தை வாங்க தயாராக இருந்தவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பேரி பேஸபுக்
இந்த நிலையில் முகம்மது ஷாபியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷாபி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஸ்ரீதேவி என்ற போலி பேஸ்புக் ஐ.டி மூலம் பகவல் சிங்கிடம் பெண் போன்று பழகியுள்ளார் ஷாபி. அது பெண்தானா என்பதை கண்டறிய மெசேஞ்சரில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும்படி பகவல் சிங் கூறியுள்ளார். கிரிமினலாக யோசித்த ஷாபி எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பேச வைத்து மெசேஞ்சர் மூலம் சில வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். முதலில் செல்வம் பெருக என சாதாரண பூஜைகளை செய்து நடித்துள்ளார் முஹம்மது ஷாபி. அப்போது சிறிது சிறிதாக பகவல்சிங் தம்பதியிடம் இருந்து ஆறு லட்சம் ரூபாய் வரை ஷாபி வாங்கியுள்ளார்.
அந்த பணத்தை திரும்ப கேட்டபோது, இவர்களை கொலை வழக்கில் சேர்த்துக்கொண்டால் ஏற்கனவே வாங்கிய பணத்தை கேட்கமாட்டார்கள், மிரட்டி கூடுதல் பணம் பறிக்கலாம் என ஷாபி திட்டமிட்டிருக்கிறார்.
அதற்காகத்தான் நரபலி பூஜை என்ற ஐடியாவை சொல்லியிருக்கிறார். நரபலி கொடுத்தால் பலன் கிடைக்குமா என ஸ்ரீதேவி பேஸ்புக் ஐ.டி-யிடம் சந்தேகம் கேட்டுள்ளார். நான் அப்படி பூஜை செய்து பலன் கிடைத்தது என ஸ்ரீதேவி பேஸ்புக் ஐடி-யில் இருந்து பதில் வந்துள்ளது.
அதை நம்பி நரபலிக்கு தயாராகியுள்ளார் பகவல் சிங். இரண்டாவது நரபலி கொடுத்த சமயத்தில் மனித இறைச்சி விற்றால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் எனவும். மார்பகம், இதயம், ஈரல் என ஒவ்வொரு உறுப்புகளின் இறைச்சிக்கும் தனித்தனி விலை வைத்து விற்பனை செய்யலாம் எனவும் ஷாபி ஐடியா கொடுத்துள்ளார்.
மேலும், மனித இறைச்சி வாங்க பெங்களூரில் இருந்து ஒரு வியாபாரி வருவதாக ஷாபி கூறியுள்ளர். அதற்காக இறைச்சியை பிரிட்ஜில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
ஷாபி சொன்னபடி யாரும் வராததால் இறைச்சியை குழிதோண்டி புதைத்துள்ளனர். ஷாபி சொன்னதை எல்லாம் தம்பதியினர் நம்பியதன் பின்னணி குறித்தும் மேலும் விசாரணை நடத்தவேண்டியது உள்ளது.
இவ்வாறு போலீசார் கூறினார்.
சந்தேகம்
நரபலி கொடுத்த பெண்களின் உடல் உறுப்புகள் நேர்த்தியாக வெட்டப்பட்டிருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி முகமது ஷாபியிடம் கேட்டபோது, சில மாதங்கள் பிணவறையில் பணி புரிந்ததாகவும், அங்கு பிரேத பரிசோதனையின்போது உடல் உறுப்புகள் வெட்டப்படுவதை பார்த்து தெரிந்து கொண்டதாக கூறினார். இதனை போலீசார் முழுமையாக நம்பவில்லை.
எனவே இவர்களுக்கு வேறு நபர்கள் உதவி செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அந்த நபர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.