அ.தி.மு.க.வை பழிவாங்க தி.மு.க. கொல்லைப்புறமாக நுழைய முயற்சிக்கிறது – எடப்பாடி பழனிசாமி பேட்டி
1 min read
DMK to take revenge on ADMK. Trying to enter the backyard – Edappadi Palaniswami interview
18.10.2022
அரசியல் ரீதியாக அ.தி.மு.க.வை எதிர்கொள்ள முடியாத தி.மு.க. தலைவர் கொல்லைப்புறமாக அ.தி.மு.க.வை பழிவாங்க முயற்சிக்கிறார் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
வெளியேற்றம்
சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை துணைச் செயலாளராகவும் நியமனம் செய்ய வேண்டும் என்று கடிதம் கொடுத்து சுமார் இரண்டு மாத காலமாகிறது. பின்னர் நினைவூட்டல் கடிதம் இரண்டு முறை சட்டப்பேரவைத் தலைவர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் நேற்று வரை சரியான முடிவு எடுக்கப்படவில்லை. நேற்று எங்களது கோரிக்கையை ஏற்காமல், ஏற்கெனவே துணைத் தலைவராக இருந்தவரே தொடர வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அவரை அந்த இருக்கையில் அமர வைத்துள்ளனர். நியாயமாக நடுநிலையோடு செயல்படவேண்டிய சபாநாயகர், அரசியல் ரீதியாக செயல்படுவதை பார்க்கிறோம். தி.மு.க. தலைவர் ஆலோசனைபடி சட்டசபை தலைவர் செயல்படுகிறார்” ஆர்.பி.உதயகுமார் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பதவிகளுக்காக முன்பே கடிதம் கொடுக்கப்பட்டது. நாங்கள் வைத்த கோரிக்கைகளை சபாநாயகர் ஏற்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பையே சபாநாயகர் மதிக்கவில்லை. சட்டமன்றம் என்பது வேறு, கட்சி என்பது வேறு. அதிகமான எம்எல்ஏக்கள் யாரை சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்கின்றனரோ அவர் முதல்வராக செயல்படுவார். அதுதான் நடைமுறை.
அதேபோலத்தான் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கும் தேர்வு செய்யப்படுவர். அதுதான் மரபு. அந்த மரபும், மாண்பும் இன்று சட்டப்பேரைவயில் சட்டப்பேரவைத் தலைவர் மூலம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் ரீதியாக அ.தி.மு.க.வை எதிர்கொள்ள முடியாத தி.மு.க. தலைவர் கொல்லைப்புறமாக, சட்டப்பேரவைத் தலைவர் மூலமாக எங்களை பழிவாங்கப் பார்க்கிறார். ஒருபோதும் நடக்காது. என்றைக்கும் நீதி, உண்மை, தர்மம்தான் வெல்லும். திமுகவிற்கு ஆதரவாக எங்கள் கட்சியின் உயர் பொறுப்பாளரே செயல்படுகிறார் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தது உண்மையாகிவிட்டது.
விசாரணை அறிக்கை
ஜெயலலிதா மரணம் தொடர்பாகவும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாகவும் விசாரணை ஆணையத்தை அமைத்தது நாங்கள் தான். நாங்கள் அமைத்த விசாரணை ஆணையத்திற்கு அவர்களின் விளக்கம் தேவையில்லை. மக்கள் கொதிப்பில் உள்ளனர். இந்த ஆட்சி எப்ப போகும் என பார்த்து கொண்டுள்ளனர். இதனை மறைக்கவே இந்தி எதிராக தீர்மானம் கொண்டு வருகின்றனர். தி.மு.க.,பொதுக்குழுவில், தி.மு.க. தலைவர் பேசும் போது, ‘நான் கண் விழிக்கிற போது எங்களது கட்சியில் இருந்து என்ன பிரச்னை வருமோ என பயத்துடன் விழக்கிறேன்’ எனக்கூறியுள்ளார். அது தான், ஆட்சி குறித்து அவர் கொடுத்த வாக்குமூலம். அப்படி இருக்கையில் மக்களை எப்படி காக்க முடியும்.நீங்கள் என்றைக்கு ஆட்சிக்கு வந்தீர்களோ அப்போதே மக்களுக்கு தூக்கம் போய் விட்டது.
இவ்வாறு கூறினார்.