யானையையும் நரிகள் கொன்றுவிடும்: ஆறுமுகசாமி ஆணையம் எடுத்துக்காட்டு
1 min read
Foxes can kill an elephant: Arumugasamy Commission is an example
18,10,2022
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ளது. அதில், ‛வேல் ஏந்திய வீரர்களை வீழ்த்தும் ஆற்றல் உடைய யானை, சேற்றில் சிக்கிவிட்டால் நரிகள் கூட அதை கொன்றுவிடும்’ என பொருள்படும் குறளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையில், ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி இறக்கவில்லை என்றும் டிசம்பர் 4ம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கே அவர் இறந்துவிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், ‛சசிகலா, டாக்டர் சிவக்குமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ எனவும் பரிந்துரைத்துள்ளது.
இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் முடிவில் இரு திருக்குறள்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
‛‛நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்”
- என்ற திருக்குறளும் அதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதியிருந்த, ‘நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் என்ற உரை இடம்பெற்றுள்ளது.
இரண்டாவதாக,
‛‛காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு” - என்ற திருக்குறளும் அதற்கு டாக்டர் மு.வரதராசன் எழுதிய, ‛வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும் கால் ஆழ சேற்று நிலத்தில் அகப்படும்போது நரிகள் கொன்றுவிடும்’ என்ற விளக்கமும் இடம்பெற்றுள்ளன.