பீகாரில் பள்ளிக்கூட தேர்வில் இடம்பெற்ற காஷ்மீர் குறித்த கேள்வியால் சர்ச்சை
1 min read
Controversy over Kashmir question in school exam in Bihar
19.10.2022
பீகார் பள்ளிக்கூட தேர்வில் நாடுகள் குறித்த கேள்வியில் காஷ்மீரின் பெயர் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வுகள்
பீகார் மாநில பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மாநில கல்வித்துறை சார்பில் கடந்த 12 முதல் 18-ந்தேதி வரை இடைக்கால தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் 7-ம் வகுப்புக்கான ஆங்கில தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கேள்வியில், “பின்வரும் நாடுகளைச் சேர்ந்த மக்கள் எவ்வாறு அழைக்கப்படுவார்கள்?” என கேட்கப்பட்டிருந்தது. அதில் சீனாவைச் சேர்ந்த மக்கள் சீனர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்ற உதாரணம் வழங்கப்பட்டிருந்த நிலையில் நேபாளம், இங்கிலாந்து, காஷ்மீர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்படுவார்கள்? என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது.
சர்ச்சை
நாடுகள் குறித்த கேள்வியில் காஷ்மீரின் பெயர் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கேள்வித்தாள் பீகாரில் உள்ள அராரியா, கிஷான்கன்ச் மற்றும் கதிஹார் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறுகையில், இந்த கேள்வித்தாள் மாநில கல்வித்துறையிடம் இருந்து வந்ததாகவும், இது கவனக்குறைவால் நடந்த பிழை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.