நிதிஷ் குமார் பாஜகவுடன் தொடர்பில் தான் உள்ளார்- பிரஷாந்த் கிஷோர் குற்றச்சாட்டு
1 min read
Nitish Kumar is in touch with BJP – Prashant Kishore alleges
22.10.2022
நிதிஷ் குமார் பாஜகவுடன் தொடர்பில் தான் உள்ளார் என்று பிரஷாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.
நிதிஷ்குமார்
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ் குமார் தற்போது ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து பீகாரில் ஆட்சி அமைத்துள்ளார். பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணியை உருவாக்கும் முயற்சியிலும் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். இதற்காக எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசித்து வருகிறார்.
இந்த நிலையில், பாஜகவுடன் தொடர்பை நிதிஷ் குமார் கைவிடவில்லை என்றும் தேவைப்பட்டால் மீண்டும் சேர்ந்து கொள்வார் எனவும் பிரஷாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார். பீகாரில் நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் பிரஷாந்த் கிஷோர் கூறியதாவது;-
பாஜக
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியிருக்கும் நிதிஷ் குமார், அந்தக் கட்சிக்கு எதிராக தேசிய கட்சிகளை ஒன்றிணைக்க பாடுபட்டுக்கொண்டிருக்கிறார் என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் பாஜகவுக்கான வாசலை அவர் முழுவதுமாக மூடிவிடவில்லை. தன்னுடைய கட்சியின் எம்பியும் ராஜ்ய சபாவின் துணைத்தலைவருமான ஹரிவன்ஷ் மூலமாக பாஜகவுடன் அவர் தொடர்பில் இருக்கிறார். சூழல் எப்போது மாறுகிறதோ அப்போது அவர் மீண்டும் பாஜகவுடன் கைகோத்துக் கொண்டு அவர்களுடன் இணைந்து பணியாற்றுவார்.
இவ்வாறு தெரிவித்திருந்தார்.
பதில்
ஆனால், இதற்கு பதிலளித்துள்ள நிதிஷ் குமார், பிரஷாந்த் கிஷோர் விளம்பரத்திற்காக பேசி வருவதாக பதிலடி கொடுத்தார்.