மதத்தின் பெயரால் எங்கே போய் நிற்கிறோம்?- சுப்ரீம் கோர்ட்டு வேதனை
1 min read
Where do we stand in the name of religion?- Supreme Court anguish
22.10.2022
மதத்தின் பெயரால் எங்கே போய் நிற்கிறோம் என, வெறுப்பு பேச்சுகளை தடுக்க கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வேதனை வெளியிட்டுள்ளது.
வெறுப்பு பேச்சு
நாட்டில் முஸ்லிம்களை குறிவைத்து அச்சுறுத்தப்படும் வெறுப்பு பேச்சு சம்பவங்களை தடுக்கவும், அவை தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடவும் கோரி கேரளாவைச் சேர்ந்த ஷாகீன் அப்துல்லா தாக்கல் செய்த ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல், வெறுப்பு பேச்சு வாடிக்கையாகிவிட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.பி. பர்வேஷ் வர்மா, முஸ்லிம் கடைகளை புறக்கணிக்க வேண்டும் என பேசியுள்ளதாக குறிப்பிட்டு வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், வெறுப்பு பேச்சில் முஸ்லிம் ஈடுபட்டால்..? என கேட்டனர். அதற்கு கபில் சிபல், வெறுப்பு பேச்சில் முஸ்லிம் ஈடுபட்டால் அவர்களை போகட்டும் என விட்டுவிடுவார்களா? அப்படி பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
கவலை
அப்போது நீதிபதிகள், ஜனநாயக, மதச்சார்பாற்ற நாட்டில் வெறுப்பு பேச்சுகள் உண்மையிலேயே கவலைகொள்ளச் செய்கின்றன. வெறுப்பு பேச்சுகள் கண்டிக்கத்தக்கவை. இது 21-ம் நூற்றாண்டு. அரசமைப்பு சாசனத்தின் 51 ஏ பிரிவு, அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்கவேண்டும் என கூறுகிறது. இன்று நாம் மதத்தின் பெயரால் எங்கே போய் நிற்கிறோம்? என வேதனை வெளியிட்டனர்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
உத்தரவு
இந்த மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடுகிறோம். எந்த மதத்துக்கு எதிராகவும் பேசப்படும் வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக புகார்களுக்கு காத்திருக்காமல், தாமாகவே முன்வந்து வழக்கு பதிவுசெய்ய டெல்லி, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் அரசுகளுக்கு உத்தரவிடுகிறோம். புகார்களை பதிவு செய்ய மறுத்தால், கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கையாக பார்க்கப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்ட்டுள்ளது.