டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு: 4 மாநில தலைமைச் செயலாளர்களுக்கு நோட்டீஸ்
1 min read
Air pollution in Himachal Pradesh rises in Delhi: Human Rights Commission notices 4 state chief secretaries to appear in person
4.11.2022
டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதால் டெல்லி, பஞ்சாப், அரியானா, உ.பி. தலைமைச் செயலாளர்கள் நவம்பர் 10ஆம் தேதி ஆஜராக வேண்டும்.
காற்று மாசு
டெல்லியில் காற்று மாசு காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. மீறி வெடித்தால் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இதனையும் மீறி பலர் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடியதால் தீபாவளி நாளில் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி மாறியது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தலைநகர் டெல்லி அதனை சுற்றியுள்ள என் சி ஆர் பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதனால் சுவாசக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி டெல்லியின் காற்றின் தரக் குறியீடு 400 என்ற அளவை தாண்டி பதிவாகியுள்ளது. அதாவது டெல்லி முழுவதும் காற்றின் தரம் தொடர்ந்து ‘அபாயம்’ என்ற நிலையில் நீடிக்கிறது. சில பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 500 என்ற அளவை தாண்டி பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், தலைநகர் டெல்லி அதனை சுற்றியுள்ள என் சி ஆர் பகுதிகளில் காற்று மாசுபாட்டைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
டெல்லியில் மோசமடைந்து வரும் காற்று மாசுபாடு குறித்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆஜராக உத்தரவு
டெல்லி மறும் அதனை சுற்றியுள்ள என் சி ஆர் பகுதிகளில் காற்று மாசுபாடு மோசமடைந்து வருவதை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லாதால், தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிருப்தி அடைந்துள்ளது. இதனையடுத்து, டெல்லி, பஞ்சாப், அரியானா மற்றும் உ.பி. மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நவம்பர் 10 ஆம் தேதி மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சாதாரண குடிமக்களின் உரிமைகளை பாதிக்கும் இத்தகைய சூழ்நிலையில் மனித உரிமைகள் ஆணையம் ‘ஊமைப் பார்வையாளனாக’ இருக்க முடியாது. குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, பொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மாசு அளவைக் குறைக்க போதுமானதாக இல்லை, மாசு அளவை உடனடியாக குறைக்க இன்னும் நிறைய செய்ய வேண்டும். வேளாண் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளை மாநிலங்களின் செயலாளர்கள் ஒரு அறிக்கையை உருவாக்கி தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது.