July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

பிரதமர் வருகை: கண்காணிப்பு வளையத்தில் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம்

1 min read

Prime Minister’s visit: Gandhi Grama Rural University in observation ring

8.11.2022
பிரதமர் வருகை காரணமாக காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம் கண்காணிப்பு வளையத்திற்கு வந்தது.

காந்தி கிராம பல்கலைக்கழகம்

திண்டுக்கல் – மதுரை 4 வழிச்சாலையில் சின்னாளப்பட்டியில் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. 1947-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த பல்கலைக்கழகம் சமூக பணியோடு கல்வி, சுகாதாரம், மருத்துவம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
இந்த பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் பவளவிழா மற்றும் 36-வது பட்டமளிப்பு விழா வருகிற 11-ந் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 50 பேருக்கு முனைவர் பட்டங்களையும், பல்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பட்டங்களையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி எல்.முருகன் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். விழாவுக்கு காந்தி கிராம பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். துணைவேந்தர் குர்மித்சிங் வரவேற்று பேசுகிறார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ரூபேஸ்குமார் மீனா, மாவட்ட கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

பட்டமளிப்பு விழாவுக்காக 11-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் இருந்து மாலை 3 மணியளவில் தனி விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்தி கிராமம் அருகே உள்ள அம்பாத்துரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு இறங்கு தளத்துக்கு மாலை 4 மணியளவில் வந்து இறங்குகிறார்.
இதற்காக காந்தி கிராம சுகாதார, குடும்ப நல அறக்கட்டளை வளாகத்தில் ெஹலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கார் மூலம் பட்டமளிப்பு விழா நடைபெறும் பல்நோக்கு அரங்குக்கு வந்தடைகிறார். இதனை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகம் முழுவதும் புதுப்பொழிவு பெற்று வருகிறது.
ஹெலிபேடுதளம், பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கம் மற்றும் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரங்குக்கு வரும் மாணவர்கள், பார்வையாளர்களுக்கான வழித்தடம், ரெயில்வே சுரங்கப்பாதை வழித்தடங்கள் மற்றும் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து இடங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை காந்தி கிராம பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மித் சிங், பதிவாளர் சிவக்குமார், காந்தி கிராம அறக்கட்டளை அறங்காவலர் சிவக்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.