July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

15 சிறுமிகளை பலாத்காரம் செய்த கர்நாடக மடாதிபதி

1 min read

Karnataka abbot who raped 15 girls

9.11.2022
கர்நாடக மடாதிபதியால் மயக்க மருந்து கொடுத்து, 15 சிறுமிகள் வரை பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர் என போலீசார் திடுக்கிடும் தகவலை தெரிவித்து உள்ளனர்.

மடாதிபதி

கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் சிவமூர்த்தி முருகா சரணரு சுவாமி (வயது 64). இவர் மடத்தின் பள்ளியில் படித்து வந்த 2 மாணவிகளை பலாத்காரம் செய்ததாக சித்ரதுர்கா புறநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் மடாதிபதி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கைது

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி போலீசார் மடாதிபதியை கைது செய்தனர். இதனையடுத்து வார்டன் ரஸ்மி, மடத்தில் பணியாற்றி வந்த 2 ஊழியர்கள், வக்கீல் ஆகியோரை கைது செய்தனர். அனைவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.
கடந்த மாதம் மேலும் சில மாணவிகள் மடாதிபதி மீது பாலியல் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து, துணை போலீஸ் சூப்பிரண்டு அனில் தலைமையில் தனிப்படை, மடத்திற்கு சென்று சோதனை செய்தது.

ஆப்பிள்

இதன் அடிப்படையில், கோர்ட்டில் 694 பக்கம் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, சிறுமிகளுக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்ட ஆப்பிளை கொடுத்து பலாத்காரம் செய்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்பு சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறப்பட்டுள்ளது.
இதற்காக விடுதி வார்டன் ரஸ்மி, மடத்தின் செயலாளர் பரமசிவமூர்த்தி, மேலும் ஒரு ஊழியரை பயன்படுத்தியிருக்கிறார்.
இதுவரை 10 சிறுமிகளை மடாதிபதி பலாத்காரம் செய்திருப்பதாகவும், அனைவரையும் மடத்தின் அலுவலகம், படுக்கையறை, கழிவறையில் வைத்து பலாத்காரம் செய்திருப்பதாகவும் குற்றப்பத்திரிகையில் போலீசார் குறிப்பிட்டு உள்ளனர்.
அந்த குற்றப்பத்திரிகையில், அக்கா மகாதேவி விடுதி வார்டனான ராஷ்மி, இரவு 8 மணிக்கு பின்பு சிறுமிகளை மடாதிபதியின் அறைக்கு அனுப்பி வந்துள்ளார். சிறுமிகளை மடாதிபதி தகாத முறையில் அணுகும்போது எதிர்ப்பு தெரிவிக்கும் சில சிறுமிகளை, மயக்க மருந்து கலந்த ஆப்பிள்களை கொடுத்து சமரசப்படுத்துவார். அதன் பின்பு, அவர்களை பலாத்காரம் செய்துள்ளார் என விசாரணையை மேற்கொண்ட சித்ரதுர்கா போலீஸ் சூப்பிரெண்டு பரசுராம் கூறியுள்ளார்.

மிரட்டல்

வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியும் உள்ளார். கடவுளின் அவதாரம் என தன்னை கூறி கொண்ட மடாதிபதி, தனக்கு சேவை செய்யாவிட்டால் சாபமிட்டு விடுவேன் என்றும் கூறி அச்சுறுத்தி உள்ளார். அவரது சாபம், சிறுமிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் அழித்து விடும் என கூறி மிரட்டி வந்துள்ளார்.
மடாதிபதி, அநாதை குழந்தைகளையும், மடம் சார்பில் நித உதவி அளிக்கப்படும் குடும்பத்தினரின் சிறுமிகளையும் தனது இலக்காக வைத்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பாதுகாவலர்கள் அல்லது பெற்றோரிடம், மடாதிபதிக்கு உங்களது குழந்தைகளை சேவை செய்யும்படி கூறுங்கள் என கூறப்பட்டு உள்ளது. ஆனால், அவர்களுக்கு இந்த கொடுமையான செயல்கள் தெரிவதில்லை என போலீஸ் சூப்பிரெண்டு கூறியுள்ளார்.

15 சிறுமிகள்

இதேபோன்று விசாரணையில் ஈடுபட்ட, பெயர் வெளியிட விருப்பம் இல்லாத மற்றொரு மூத்த காவல் அதிகாரி கூறும்போது, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வாக்குமூலங்களை வைத்து பார்க்கும்போது 15 சிறுமிகள் வரை மடாதிபதி பலாத்காரம் செய்திருக்க கூடும் என தெரிகிறது. ஆனால், வழக்கிற்கு வலு சேர்க்கும் வகையிலான அறிவியல்பூர்வ சான்றுகள் எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

மறுப்பு

எனினும், 3 நாட்களாக 12 மணிநேரம் நடந்த விசாரணையில், இந்த குற்றச்சாட்டுகளை மடாதிபதி தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். தனக்கு எதிராக மிக பெரிய சதி நடக்கிறது என்ற ஒரே பதிலை மட்டுமே திரும்ப, திரும்ப அவர் விசாரணை அதிகாரிகளிடம் கூறி வந்துள்ளார்.

கடுமையான தண்டனை

இதற்கு முன்பு, கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி மற்றும் லிங்காயத்து சமூக முக்கிய பிரமுகரான எடியூரப்பா மடாதிபதிக்கு ஆதரவாக பேசி வந்த நிலையில், உடுப்பியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, பாலியல் வழக்கில் சித்ரதுர்கா முருக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். அவர் இவ்வாறு கீழ்தரமான செயலில் ஈடுபடுவார் என்று நான் நினைக்கவில்லை. அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கூறினார்.
இதேபோன்று, அதே சமூக உறுப்பினரான முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறும்போது, சட்டத்தின்படி மடாதிபதி தண்டிக்கப்படுவார் என கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.