வேலூரில் தலைமை ஆசிரியர் கொடுத்த தண்டனையால் 9-வகுப்பு மாணவன் சாவு
1 min read
Class 9 student dies due to punishment given by headmaster in Vellore
10.11.2022
வேலூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கொடுத்த தண்டனையால் 9ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான்.
தண்டனை
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இன்று பிற்பகல் 3 மணியளவில் பள்ளியில் 9-ம் வகுப்புக்கு ஆசிரியர் யாரும் வராததால் மாணவர்கள் சத்தமாக பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருந்தனர்.
அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியர், மாணவர்களை கண்டித்துள்ளார். அத்துடன், சத்தமிட்டு கொண்டிருந்த மாணவர்களை 4 முறை மைதானத்தை சுற்றி ஓடுமாறு தலைமையாசிரியர் தண்டனை கொடுத்துள்ளார். அதன்படி மாணவர்கள் மைதானத்தை சுற்றி ஓடிக்கொண்டிருந்தனர்.
சாவு
அப்போது மோகன்ராஜ் என்ற மாணவன் திடீரென சுருண்டு மைதானத்தில் விழுந்தான். அவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவனது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதுதொடர்பாக அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.