ஊத்துமலை அருகே இரட்டை கொலை நடந்தது ஏன்? 2 பேர் கைது
1 min read
2 people arrested in double murder near Uthumalai
12.11.2022
தென்காசி மாவட்டம், ஊத்துமலை அருகே 2 பால் வியாபாரிகள் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இரட்டை கொலை
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மகன் ஆனந்த் (வயது 28). பால் வியாபாரியான இவர் பக்கத்து ஊர்களான கங்கனாகிணறு, பலபத்திரராமபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று பால் கொள்முதல் செய்தும், வினியோகம் செய்தும் வந்தார்.
இவருக்கு துணையாக அப்பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான முருகன் என்பவரது மகன் சூரியராஜ் (17) சென்று வந்தார்.
சம்பவத்தன்று பலபத்திரராமபுரம் பகுதியில் பால் வியாபாரத்துக்கு சென்ற ஆனந்த், சூரியராஜ் ஆகிய 2 பேரும் வீடு திரும்பவில்லை. இதனால் இரவில் அவர்களை குடும்பத்தினர் தேடிச் சென்றனர்.
அப்போது பலபத்திரராமபுரம் அருகில் உள்ள தோட்டத்தில் ஆனந்த், சூரியராஜ் ஆகிய 2 பேரும் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அங்கு ஆனந்தின் மோட்டார் சைக்கிளும் சாலையோரம் கிடந்தது.
களளத் தொடர்பு
இந்த இரட்டைக்கொலை தொடர்பாக ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே ஆனந்த், சூரியராஜ் ஆகியோரை கொலை செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, நொச்சிகுளம் விலக்கில் உறவினர்களும், கிராமமக்களும் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஊத்துமலை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த இரட்டைக்கொலை தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் , பால் வியாபாரி ஆனந்திற்கும், ஊத்துமலை அருகே உள்ள கங்கனாகிணற்றைச் சேர்ந்த செல்வகுமார் (30) மனைவிக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த செல்வகுமார் தனது மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து செல்வகுமாரின் மனைவி, கணவரை விட்டு பிரிந்து சங்கரன்கோவில் அருகில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு சென்று விட்டார்.
அதன்பிறகும் ஆனந்த், செல்வகுமாரின் மனைவியிடம் பழகி வந்துள்ளார். மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதற்கு ஆனந்த்தான் காரணம் என்று கருதிய செல்வகுமார் அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார்.
இதுகுறித்து செல்வகுமார் தனது உறவினரான கங்கனாகிணற்றைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் சுதாகரிடம் (வயது 22) தெரிவித்தார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார்.
அதன்படி, சம்பவத்தன்னு இரவில் பலபத்திரராமபுரம் பகுதியில் பால் வினியோகத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வந்த ஆனந்த், சூரியராஜ் ஆகியோரை காட்டுப்பகுதியில் சுதாகர் வழிமறித்தார்.
அப்போது அவர்களின் பின்னால் இருளில் மறைந்து பதுங்கியிருந்த செல்வகுமார் திடீரென்று ஓடி வந்து சுத்தியலால் சூரியராஜின் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆனந்த் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை செல்வகுமார் விரட்டி சென்று சுத்தியலால் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ஆனந்தும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
பின்னர் செல்வகுமார், சுதாகர் இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
கைது
இதையடுத்து தலைமறைவான செல்வகுமார், சுதாகர் ஆகிய 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பதுங்கியிருந்த செல்வகுமாரையும், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் பதுங்கியிருந்த சுதாகரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த இரட்டைக்கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துமலை அருகே 2 பால் வியாபாரிகளை அடித்துக் கொன்ற சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.