சென்னை விமான நிலையத்தில் மதுரை, தூத்துக்குடி விமான சேவை ரத்து
1 min read
Madurai, Tuticorin flight service canceled at Chennai airport
13.11.2022
சென்னை விமான நிலையத்தில் தொடர் மழை காரணமாக மதுரை, தூத்துக்குடி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை விமானம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று மாலை 5.10 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய விமானமும், மதுரையில் இருந்து இரவு 8.30 மணிக்கு சென்னை வர வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டது.
அதேபோல் தூத்துக்குடியில் இருந்து மாலை 5.30 மணிக்கு சென்னைக்கு வரவேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டது. மேலும் லண்டனில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு சென்னைக்கு விமானம் வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து காலை 7.30 மணிக்கு லண்டன் புறப்பட்டு செல்லும்.
ஆனால் சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமான நிறுவனம், 6 மணி நேரம் தாமதமாக பகல் 1.30 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்படுவதாக பயண திட்டத்தை மாற்றி அமைத்தது. இது பற்றி பயணிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் சென்னையில் இருந்து திருச்சி, சீரடி, கோவா, மும்பை, ஹாங்காங் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. பயணிகளுக்கு விமானம் தாமதம் மற்றும் ரத்து பற்றிய தகவல்கள் முன்னதாகவே தெரிவிக்கப்பட்டதால் பாதிப்பு எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.