சிறார்கள் சம்மதத்துடன் உறவு கொள்வதை குற்றமாக கருத முடியாது – டெல்லி ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
1 min read
Consensual sex with minors cannot be criminalized – Delhi High Court sensational judgement
14.11.2022
சிறார்கள் சம்மதத்துடன் உறவு கொள்வதை குற்றமாக கருத முடியாது என்று டெல்லி ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
17 வயது சிறுமி திருமணம்
17 வயது சிறுமியை திருமணம் செய்த வழக்கில், கடத்தல் மற்றும் கற்பழிப்பு குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க 2021-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டம் தான் போக்சோ சட்டமாகும். 18 வயதுக்கு குறைவான அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். டெல்லியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அவள் குடும்பத்தால் ஒரு ஆணுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனால் சிறுமி அந்த நபருடன் இருக்க விரும்பவில்லை.
இதனையடுத்து அக்டோபர் 2021இல், சிறுமி தான் காதலித்து வந்த தன்னுடைய ஆண் நண்பர் வீட்டிற்கு வந்தார். அவர் தற்போது குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார். அவர் சிறுமியை பஞ்சாப் அழைத்துச் சென்றார். அங்கு அவர் அந்த 17 வயது சிறுமியை மணந்தார். இந்த தம்பதிக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் போலீஸ் பாதுகாப்பு வழங்கியது.
அவர் 17 வயது பெண்ணை மணந்ததை குறிப்பிட்டு, சிறுமியின் பெற்றோர் டெல்லி போலீசில் புகார் அளித்தனர். உடனே அந்த நபர் கைது செய்யப்பட்டு டிசம்பர் 2021 முதல் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அந்த நபர் ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டை அணுகினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜஸ்மீத் சிங், சிறுமியின் வாக்குமூலத்தை கேட்டறிந்தார். அப்போது தான் சொந்த விருப்பத்தின் பெயரில் தான் அந்த இளைஞனை திருமணம் செய்து கொண்டேன் எனக் கூறினார். இந்த விவகாரத்தில் ஏற்கெனவே பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டு தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டதையும் அந்த சிறுமி நீதிபதியிடம் கூறினார்.
இதை தொடர்ந்து கோர்ட்டு உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:-
அந்த பெண் தனது சுதந்திர விருப்பத்தின் பேரில் அந்த நபரை திருமணம் செய்து கொண்டார். எந்த விதமான செல்வாக்கு, அச்சுறுத்தல், அழுத்தம் அல்லது வற்புறுத்தலின்றி அந்த பெண் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபரை திருமணம் செய்து கொண்டார்.
அந்த சிறுமியே தான் அந்த நபரிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். இது இருவருக்கும் இடையேயான காதல் உறவு என்பது தெளிவாகிறது. அவர்களுக்கு இடையேயான பாலியல் உறவானது இருவரின் முழு சம்மதத்துடன் நடந்தது தெளிவாகிறது. பாதிக்கப்பட்டவர் மைனர், எனவே, அவர் உடலுறவுக்குச் சம்மதம் தெரிவிப்பது சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்படாது என்றாலும், அந்த சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அது சம்மதத்துடன் நடந்து உறவு என்பது தெளிவாகவே தெரிகிறது. ஆகவே பாதிக்கப்பட்ட பெண்ணின் அறிக்கையை புறக்கணித்து, குற்றம் சாட்டப்பட்டவரை சிறையில் அடைக்க வைப்பது, விபரீதமான நீதியாகிவிடும் என்று கோர்ட்டு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருமித்த உடலுறவு போக்சோவின் கீழ் வராது. போக்சோ சட்டம் குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகத்தில் இருந்து பாதுகாக்கும் என்றும், இருதரப்பு சம்மதத்துடன் நடக்கும் உடலுறவை குற்றமாக்குவதற்கு போக்சோ சட்டம் அல்ல என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
ஜாமீன்
இதனை தொடர்ந்து, தனது 17 வயது மகளை கடத்தி திருமணம் செய்ததாக சிறுமியின் தந்தை தாக்கல் செய்த புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.