கட்டாய மதமாற்றம் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை
1 min read
Forced conversions threaten national security – Supreme Court warns
14.11.2022
கட்டாய மதமாற்றம் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவி்ட்டு உள்ளது.
மதமாற்றம்
நாட்டில் நடைபெறும் கட்டாய மதமாற்றம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கவலை தெரிவித்துள்ளது. கட்டாய மதமாற்றம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. சூனியம், மூடநம்பிக்கை மற்றும் வலுக்கட்டாய மத மாற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வழக்கறிஞரும், பாஜக தலைவருமான அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கட்டாய மதமாற்றம் மிகவும் தீவிரமான பிரச்சினை என்றும், இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மத சுதந்திரத்தை பாதிக்கிறது என்றும் கூறியது.
கட்டாய மதமாற்றம் நிறுத்தப்படாவிட்டால் மிகவும் கடினமான சூழ்நிலை உருவாகும் என்று எச்சரித்துள்ள நீதிபதிகள், மத சுதந்திரம் இருக்கலாம், ஆனால் கட்டாய மதமாற்ற சுதந்திரம் இல்லை. இது நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும்.இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
மேலும், கட்டாய மதமாற்ற விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் நவம்பர் 22ஆம் தேதிக்குள் இந்த விவகாரத்தில் எதிர் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய கோர்ட்டு கூறியுள்ளது. பல மாநிலங்கள் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக சட்டங்களை இயற்றியுள்ளன.
இவற்றில் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அரியானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் இதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன. இவை அனைத்தும் பாஜக ஆளும் மாநிலங்கள்.இந்த வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 28-ம் தேதி நடைபெறும்.