தேசிய அளவிலான கார் பந்தய போட்டியில் மாமல்லபுரம் வீரர் முதலிடம்
1 min read
Mamallapuram player tops national level car racing competition
22.11.2022
ஐதராபாத்தில் நடந்த தேசிய அளவிலான கார் பந்தய போட்டியில் மாமல்லபுரம் வீரர் முதலிடம் பிடித்து பரிசு கோப்பை வென்றார்.
ராகுல்ரங்கசாமி
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் வசித்து வருபவர் ராகுல்ரங்கசாமி (வயது 27). கார் பந்தய வீரரான இவர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த தேசிய அளவிலான கார் பந்தய போட்டியில் பங்கேற்று பார்முலா முதல் சுற்றில் நடந்த போட்டியில் பங்கேற்று அதிவேகத்தில் கார் ஓட்டி முதலிடம் பிடித்து பரிசு கோப்பை வென்றுள்ளார்.
இந்த போட்டியில் கர்நாடகா, டெல்லி, மராட்டியம், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், பீகார், ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், தமிழ்நாடு, கேரளா மாநிலங்களை சேர்ந்த கார் பந்தய வீரர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் பார்முலா முதல் சுற்றில் 24 பந்தய கார்கள் பங்கேற்றன.
முதலிடம்
இதில் ராகுல்ரங்கசாமி ரேஸ் கார் பாதையில் 23 கார்களை முந்திச்சென்று 250 கிலோ மீட்டர் அதிவேகத்தில் கார் ஓட்டி முதலிடம் பிடித்து பரிசு கோப்பை வென்றார். இவர் இதற்கு முன்பு இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் நடைபெற்ற கார் பந்தய போட்டியிலும், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் நடைபெற்ற கார் பந்தய போட்டியிலும், இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற கார் பந்தயபோட்டியிலும், டெல்லியில் நடைபெற்ற கார் பந்தய போட்டியிலும் பங்கேற்று 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது