யூடியூப் சேனலில் பங்கேற்க பாஜக நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடு
1 min read
New restriction for BJP activists to participate in YouTube channel
22.11.2022
யூடியூப் சேனலில் பங்கேற்க பாஜக நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாஜகவின் கருத்துக்களை, சித்தாந்தங்களைப் பதிவிடுவதற்கும், எதிர்க்கட்சிகளின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கும் சமூக வலைதளங்கள் பெரிதளவு பயன்படுத்தப்படுகிறது. சமீபகாலமாகத் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களுக்கு இணையாக யூடியூப் செயலியில் எண்ணற்ற சேனல்கள் இயங்கி வருகிறது.
நமது கருத்துக்களை முன்னெடுத்து வைப்பதற்கு யூடியூப் சேனல்களும் உதவுகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இவ்வாறு யூடியூப் சேனல்களுக்கு தமிழக பாஜக கட்சியின் சார்பில் நேர்காணல் வழங்கி வரும் நிலையில் சிலர் கட்சியின் நிலைப்பாடுகளை விடுத்து தங்கள் சொந்த கருத்துக்களை முன்னிறுத்தி வருகிறார்கள். கூட்டணி கட்சியை பற்றியும், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பற்றியும் கட்சியில் உள்ள சிலர் முன்வைக்கும் விமர்சனங்கள் கட்சியின் நிலைப்பாடாக மாறுவது ஏற்புடையது அல்ல. அந்த காணொளியை காணும் மக்களுக்கு இது பாஜகவின் அதிகாரப்பூர்வமான கருத்து மற்றும் நமது கட்சியின் எண்ண ஓட்டம் இது தான் போன்ற தவறான பிம்பத்தை மக்களிடம் எடுத்து சென்று விடுகிறது. கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களை தவிர மற்றவர்கள் யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் வழங்க விருப்பப்பட்டால் அதை பாஜக மாநில ஊடக பிரிவின் தலைவர் ரங்கராயக்கலுவிடம் தெரியப்படுத்த வேண்டும்.
இனி வரும் காலங்களில், கட்சியின் ஒப்புதல் பெற்ற பின்பே நீங்கள் நேர்காணல் வழங்க வேண்டும். கட்சி கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.