71 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதம்: பிரதமர் மோடி வழங்கினார்
1 min read
Appointment letter to 71 thousand people: PM Modi issued
22.11.2022
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்றுவேலை வாய்ப்பு கண்காட்சி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
வேலைவாய்ப்பு
அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்குமாறு அனைத்து மத்திய அரசு துறைகளையும் பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்கினார்.
இந்தநிலையில், மத்திய அரசின் ரோஜ்கார் மேளா (வேலைவாய்ப்பு கண்காட்சி) இன்று நடைபெற்றது. அதில், காணொலி காட்சி மூலமாக பங்கேற்ற பிரதமர் மோடி சுமார் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார். அத்துடன், அவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
வளர்ந்த நாடு
இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் உலக வல்லுநர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பால் இளைஞர்கள் பலன்களை பெறுகின்றனர். இந்தியாவில் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. கொரோனா தொற்று மற்றும் போரால் புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் உலகம் முழுவதும் சுணக்கம் ஏற்பட்டது. ஆனால் இந்த காலம் தான் இந்தியா தனது பொருளாதார பலத்தை நிருபிப்பதற்கான பொன்னான காலம் என பொருளாதார அறிஞர்களும், நிபுணர்களும் தெரிவித்தனர்.
அமிர்த காலத்திற்குள் இந்தியா நுழைந்துள்ளது. இந்த நேரத்தில் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். அந்த உறுதிமொழியை மெய்பிக்க நீங்கள் அனைவரும் தான் “சாரதியாக” செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.