July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

பயங்கரவாதி ஷாரிக், வாட்ஸ் அப் முகப்பு படத்தில் ஈஷா யோகா மையம்

1 min read

Terrorist Shariq, Isha Yoga Center in WhatsApp home picture

22.11.2022
மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி ஷாரிக் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் என்.ஐ.ஏ. விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவன தனது வாட்ஸ் அப் முகப்பு படத்தில் ஈஷா யோகா மையத்தை வைத்திருந்தான்.

குக்கர் வெடிகுண்டு

மங்களூருவில் குக்கர் வெடிகுண்டை வெடிக்க செய்த பயங்கரவாதி ஷாரிக் மிகப்பெரிய நாசவேலைக்கு திட்டம் தீட்டி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவனது பின்னணி தொடர்பாக கர்நாடக மாநில போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் தமிழக காவல் துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு விசாரணையை வேகப்படுத்தி இருக்கிறார்கள். பயங்கரவாதி ஷாரிக் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்துவதற்கு முன்பு கோவையில் 3 நாட்கள் தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.
மதுரை மற்றும் நாகர்கோவிலிலும் அவன் போய் தங்கியுள்ளான். பின்னர் கேரளா சென்றும் சதி திட்டத்துக்கான வேலைகளில் ஷாரிக் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
கோவையில் கடந்த மாதம் கார் குண்டு வெடிப்பு நடந்த நிலையில் ஷாரிக் கோவையில் தங்கி இருந்து பலரை சந்தித்து பேசி உள்ளான். மதுரை, நாகர்கோவிலிலும் ஷாரிக் தங்குவதற்கு பலர் உதவி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் பின்னணி பற்றிய விசாரணையிலேயே தமிழக போலீசார் இறங்கியுள்ளனர்.

மங்களூருவில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது போல தமிழகத்திலும் நாசவேலையில் ஈடுபட பயங்கரவாதி ஷாரிக் சதி திட்டத்தில் ஈடுபட்டிருக்கலாமோ? என்கிற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப் முகப்பு

இந்த நிலையில், பயங்கரவாதி ஷாரிக் கோவை மாவட்டத்தில் உள்ள பிரபல ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலையை ‘வாட்ஸ் அப்’ முகப்பு படத்தில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஷாரிக் ஈஷா மையம் சென்றாரா..? அல்லது எதற்காக ஆதியோகி சிலை புகைப்படத்தை வைத்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் ஷாரிக் பயன்படுத்தி வாட்ஸ் அப் எண் பிரேம் ராஜ் என்ற பெயரில், செயல்பட்டு வந்ததாகவும், அந்த எண்ணில் இருந்து யாரிடமும் தொடர்பு கொள்ளவில்லை எனவும், வாட்ஸ் அப் கால் மூலமாக தகவல்கள் பரிமாறப்பட்டிருக்கலாம் என்றும் தடை செய்யப்பட்ட அமைப்பிடம் ஷாரிக்குக்கு தொடர்பு இருக்கலாம் என்ற பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக கோவையில் ஷாரிக் 3 நாட்கள் தங்கி இருந்தது போலீசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் ஷாரிக்குக்கு மிகப்பெரிய அளவில் பலர் உதவிகளை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதை தொடர்ந்து அது தொடர்பான தகவல்களை திரட்டும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதன் முடிவில் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.