தமிழகத்தில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும் – அமைச்சர் சேகர் பாபு பேட்டி
1 min read
VIP darshan will be phased out in Tamil Nadu – Minister Shekhar Babu interview
22.11.2022
பெரிய கோவில்களில் வருமானத்தை பொறுத்து விஐபி தரிசனம்,கட்டண தரிசனத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட பணி முன்னேற்றம் மற்றும் இதர பணிகள் குறித்த சீராய்வுக் கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. சீராய்வு கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
திமுக பொறுப்பேற்ற பிறகு, மாதந்தோறும் இந்து சமய அறநிலைத்துறை செயலாளர் மற்றும் ஆணையர் தலைமையில் 15வது சீராய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. ரூ.3200 கோடி மதிப்பிலான பணிகள் இந்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலைத்துறை வரலாற்றில், இவ்வளவு பணிகள் மேற்கொண்டது முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் தான்.
வி.ஐ.பி. தரிசனம்
பெரிய கோவில்களில் வருமானத்தை பொறுத்து விஐபி தரிசனம்,கட்டண தரிசனத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இன்றைய கூட்டத்தில், கூடுதலாக மருத்துவமனைகள் அமைத்தல் மற்றும் ஏற்கனவே செயல்பட்டு வரும் ஒரு வேளை அன்னதானம் குறித்தும் பேசப்பட்டது. சபரிமலை யாத்திரைக்காக 24 மணி நேர தகவல் மையம் அமைத்து, சபரிமலையிலே அரசு அதிகாரிகளை இந்து சமய அறநிலைத்துறை நியமிப்பது குறித்தும், தமிழ்நாட்டில் இருந்து வரக்கூடிய பக்தர்களுக்கு உதவி செய்யும் வகையிலான திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டது.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு 30 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆட்சியில் ரூ.254 கோடி வாடகை வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்சி வந்த பிறகு 300க்கும் மேற்பட்ட திருக்கோயில்களின் கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது. 1000 ஆண்டு கால பழமை வாய்ந்த கோயில்களுக்காக நிதி ஒதுக்கி, அந்த கோயில்களை புணரமைப்பு செய்வதற்கு, இந்த ஆண்டு டெண்டர் விடுவது பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இதுவரை 87,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மீதமுள்ள 13,000 மரக்கன்றுகள் விரைவில் நடப்படும். அதிகாரிகள் உறங்குவது ஐந்து மணி நேரம் மட்டும் தான். மீதமுள்ள 19 மணி நேரத்தில் எப்போதும் அழைத்தாலும் அவர்களை தொடர்பு கொள்ளலாம். அதிகாரிகளுக்கு வயர்லெஸ் மைக் கொடுக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.