கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை-காங்கிரஸ் கண்டனம்
1 min read
Crude oil prices fall but petrol, diesel prices not reduced-Congress condemns
2.12.2022
கச்சா எண்ணெய் விலை 25 சதவீதம் குறைந்தும், பெட்ரோல், டீசல் விலையை 1 ரூபாய் கூட குறைக்கவில்லை என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து மத்திய அரசு உச்சத்தில் வைத்திருப்பதை காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது.
இதுபற்றி காங்கிரஸ் தலைவர் கார்கே டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
2014-ம் ஆண்டு மே 16-ந்தேதி (டெல்லி நிலவரம்) ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 107.09 டாலர் (சுமார் ரூ.8,500). அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.51. ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.57.28. இன்றைய தேதியில் (டிசம்பர்- 1) கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 87.55 டாலர் (சுமார் ரூ.7,100). ஆனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.96.72, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.89.62.10 மாதங்களில் இல்லாத அளவுக்கு இப்போது கச்சா எண்ணெய் விலை மலிந்துள்ளது. ஆனால் பா.ஜ.க.வின் கொள்ளை அதிகமாகவே இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ராகுல்காந்தி
பெட்ரோல், டீசல் விலை பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-
கடந்த 6 மாதங்களில் கச்சா எச்சா எண்ணெய் விலை 25 சதவீதத்துக்கும் அதிகமாகவே குறைந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய்க்கு மேல் குறைக்க முடியும். ஆனால் மத்திய அரசு ஒரு ரூபாய்கூட குறைக்கவில்லை. விலைவாசி உயர்வால் மக்கள் அல்லல்படுகிறார்கள். ஆனால் பிரதமரோ பணத்தை மீட்டெடுப்பதில் தீவிரமாக இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.