மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்குவோம்-மு.க.ஸ்டாலின் உறுதி
1 min read
We will provide equal opportunities to the differently abled – M.K.Stalin assured
2.12.2022
மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்கியும், அவர்களுக்கு தடையற்ற சூழலை அமைத்தும் அவர்களை நம் வாழ்வில் ஒருங்கிணைப்போம் என உறுதி கொள்வோம் என்று முதல் அமைச்சர் மு-க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாற்றுதிறனாளிகள்
ஒவ்வோராண்டும் டிசம்பர் மாதம் 3ம் நாள் ” அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம்” உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை சமுதாயத்தில் ஒருங்கிணைத்து சம உரிமையுடன் வாழ்வதற்கு ஏற்ற சூழலை அமைத்து, அவர்களுக்கு உரிய வாய்ப்பினை வழங்க அனைவரும் உறுதி மேற்கொள்வதுடன், இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக போதுமான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்தும் விதமான இந்த நாள் அமைந்துள்ளது.
இந்நாளில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஏதுவாக விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் விழாக்கள் நடத்தப்பட்டும், மாற்றுத்திறனாளிகள் சேவையினை ஊக்குவிக்கும் வகையில் மாநில விருதுகள் வழங்கப்பட்டும் வருகிறது.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களின் திறனுக்கேற்ற தொழிற்பயிற்சிகள் வழங்கி வேலைவாய்ப்பினை உருவாக்கவும், அவர்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்தியும், அவர்கள் தன்னிச்சையாக பிறரைச் சாராமல் வாழ்வதற்கு பயன்பெறும் நவீன உதவி உபகரணங்கள் பற்றியும் விவரங்களைக் காட்சிப்படுத்தியும், இந்த நாள் மாநிலம் முழுவதும் அடையாளப்படுத்தப்படுகிறது.
இந்நாளில், நாம் அனைவரும் மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்கியும், அவர்களுக்கு தடையற்ற சூழலை அமைத்தும் அவர்களை நம் வாழ்வில் ஒருங்கிணைப்போம் என உறுதி கொள்வோமாக.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.